5531. வீணே பராக்கில் விடாதீர் உமதுளத்தை
நாணே உடைய நமரங்காள் - ஊணாகத்
தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான் சித்தாட
உள்ளியநாள் ஈதறிமின் உற்று.
உரை: மானம் உடைய நம்மவர்களே! வீணான பராக்கு இயல்பால் உங்கள் மனத்தைப் புலன்கள் மேல் ஓட விடாதீர்கள்; நமக்குரிய சிவ பெருமான் உண்ணும் உணவாகத் தெளிந்த திருவருளாகிய அமுதத்தை எனக்கு இன்று ஞானத்தோடு சேர்த்துக் கொடுத்தான்; ஆகவே ஞானத் திருவிளையாடல்களைப் புரிதற்கு அவன் நினைந்தருளிய நாள் இதுவாம் என்று உணர்வீர்களாக. எ.று.
பராமுகம் என்பது உலக வழக்கில் பராக்கு என வந்தது. நாணமாவது தகாதவற்றைக் கண்டாலும் கேட்டாலும் மனம் சுருங்குதல். நம்மவர் என்பது நமர் என வந்தது. திருவருளையும் சிவஞானத்தையும் சேர்த்துக் கொடுத்தான் என்பார், “சேர்த்தளித்தான்” என்று சொல்லுகின்றார். சித்தாடல் - அருள் ஞானச் செயல் வகைகள். உள்ளிய நாள் - நினைந்தருளிய நாள். (45)
|