பக்கம் எண் :

5533.

          ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற
          நாள்எதுவோ என்று நலியா தீர் - நீள
          நினையாதீர் சத்தியம்நான் நேர்ந்துரைத்தேன் இந்நாள்
          அனையான் வருகின்றான் ஆய்ந்து.

உரை:

     நம்மை ஆட்கொண்டு அருளுபவனும் நம்முடைய தந்தையுமாகிய சிவபெருமான் நம்பால் வருகின்ற நாள் எந்நாளோ என்று எண்ணி வருந்த வேண்டாம்; அது பற்றி நெடிது நினைந்து வருந்தவும் வேண்டாம்; நான் உண்மையை உணர்ந்து உரைக்கின்றேன்; அவன் இந்நாளே வருகின்றான் என அறிமின். எ.று.

     ஆளுடையான் - தனது பேரருளால் நம்மை ஆண்டருளும் முதல்வன். நலிதல் - வருந்துதல். அவன் என்பது அனையான் என வந்தது. ஆய்ந்து நேர்ந்துரைத்தேன் என இயையும். நீள நினைத்தல் - நெடிது நினைந்து வருந்துதல்.

     (47)