பக்கம் எண் :

5542.

          ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை
          ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்
          ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள்
          வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே.

உரை:

     சக்கரத்தை உடைய திருமால் பிரமன் முதலிய தேவர்கள் எல்லாரும் கண்டு அதிசயிக்கும்படியாக எனக்குள் அருட்பெருஞ் சோதியை யுடைய ஆண்டவன் எழுந்தருளி இருப்பதால் ஏழுலகத்திலும் பிறந்து எய்தும் துன்பத்தின் நீங்கி மேல்நிலை அடைந்து பல்லூழிக் காலம் உயிர் தழைத்து ஓங்குவேனாயினேன். எ.று.

     திருமாலுக்குச் சக்கரம் சிறப்புடைய படையாதலால், “ஆழியான்” என அவனைச் சிறப்பிக்கின்றார். மலசகிதர் ஆகிய மக்கள் உள்ளத்தில் அருட்சோதி ஆண்டவன் எழுத்தருளுவது ஆச்சரியமாதலால், “ஆழியான் அயன் முதல் அதிசயித்திட” என்று கூறுகின்றார். வாழி - அசை. ஏழுலகு - மண்ணுலகத்து மேலும் கீழுமாக உள்ள ஏழுலகம் என்று கூறுவர். இனி ஊர்வன, நீர்வாழ்வன, பறப்பன, நான்கு கால்களை உடையன. தாவரம், மானுடம், தேவர் ஆகியவற்றை ஏழுலகம் என்பதுமுண்டு. மேனிலை - சிவபோகம் அனுபவிக்கும் உயர்நிலை என்பாரும் உண்டு. வாழ்க்கையில் உயருந்தோறும் உயிர் உணர்வு மிகுந்தோங்குதலால், “உயிர் தழைத்து ஓங்கினன்” என்று உரைக்கின்றார்.

     (9)