5543. இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது
மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின
தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத்
தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே.
உரை: என்பால் கொண்ட அன்பினால் என் உள்ளத்தில் அருட் பெருஞ் சோதி ஆண்டவன் கலந்துகொண்டான்; அதனால் என்உயிரைப் பற்றி நின்ற ஆணவ மலம் முழுதும் நீங்கியதுடன் மருட்கை விளைவிக்கும் கன்ம மலமும் மாயா மலமும் தொடர்பற்று ஒழிந்தன; தெளிவு தரும் பெரிய சித்திகள் யாவும் என்னை வந்து அடைந்தன. எ.று.
அறியாமையைச் செய்வதாகலான் ஆணவ மலத்தை, “இருட் பெருமலம்” என்று கூறுகின்றார். அந்த மலத்தைப் போக்குவதற்காகவே மாயையும் கன்மமும் வந்து பொருந்துவதால் அதனைப் “பெருமலம்” என்று கூறுகின்றார். பெரிய மலத்தைப் போக்குதற்குத் துணை செய்வனவும் பெருமை உடையவையாதல் பற்றி, “பெருங் கன்மம் பெருமாயை” என்று பேசுகின்றார். சித்தகள் என்றது கன்ம யோக ஞான சித்திகளை. சிவபெருமான் அன்புருவாய்த் தனது அன்பிற் கலந்து கொண்டமை விளங்க, “என் அன்பிற் கலந்ததே” என்று இயம்புகின்றார். (10)
|