5545. வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே
ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர்
வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை
ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்.
உரை: உலகத்து நன்மக்களே! மெய்யன்பினால் அமைக்கப்பட்ட பொற் சபையிலே நடித்தருளுகின்ற சிவனுடைய பொன்னார் திருவடிகளுக்கே மாலை தொடுத்து அணிந்து விளங்குகின்ற பெரியோர் முன்பு திருமால் பிரமன் முதலிய தேவர்களின் வீரம் சிறப்படையாது என அறிவீர்களாக; நான் சொல்லும் இது வேதங்களின் மேல் வைத்து ஆணையாக ஓதுவதாகும்; ஒரு பக்கமாக நின்று சொல்லுவதன்று; நடு நின்று சொல்வது எனத் தெளிவீர்களாக. எ.று.
வாரம் - அன்பு. “வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம்” எனச் சீவக சிந்தாமணி கூறுவது காண்க. ஆரம் - சொல்மாலை; பூமாலையுமாம். வீரம் என்பது ஆற்றலுடைய செயல்களைக் குறிப்பதாம். ஓரம் சொல்வது அன்பினால் நீதி பிறழ்ந்து சிவன் பக்கம் நின்று சொல்லுவதன்று. நடு நிற்றல் - நேர்மையாக இருத்தல். (2)
|