5546. ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்
நீதி கொண்டுரைத் தேன்இது நீவிர்மேல் ஏறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.
உரை: ஆதியும் அந்தமும் இல்லாத ஒப்பற்ற அம்பலத்தில் ஆடுகின்ற அருட்சோதி ஆண்டவனையே நினைந்து ஒழுகுவீர்களாக; அதனால் உயர்ந்த சிவபோகத்தைப் பெறுவீர்கள்; நீதி முறையினை உணர்ந்து இதனை உங்கட்கு உரைக்கின்றேன்; மேலும் நான் சொல்வது நீங்கள் உயர்ந்தோங்குதற்குச் சொல்லும் நன்னெறியாகும்; இது தவிர மற்றைய நெறிகள் உங்களைக் கீழ் நோக்கிச் செலுத்தும் நெறிகளாகும்; எ.று.
தோற்றக் கேடுகள் இல்லதாதலால் கூத்தப் பெருமானுடைய அருள் நலத்தை விதந்து, “ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத்தாடும் சோதி” என்று சொல்லுகின்றார். சிவபோகத்தைப் பெற விரும்புகின்றவர்கள் என்று கூறுவாராய், “சுகம் பெற விழைவீர்” என்று மொழிகின்றார். சுகமாவது சிவபோகத்தால் விளையும் சிவானந்தம். நீதி - ஈண்டு நேர்மை மேல் நின்றது. மேலேறும் வீதி - உயர்ந்தோங்குதற்கு அமைந்த ஞான நெறி. (3)
|