பக்கம் எண் :

5547.

          நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும்
          பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின்
          வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க
          வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே.

உரை:

     நாத தத்துவமாக விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தில் நடித்தருளுகின்ற சிவனுடைய சிவத் திருவடிகளைப் போற்றிப் புகழ்கின்ற பத்தர்களே அழியாத வாழ்வு பெற்ற நித்தர்களாவார்கள் என்று அறிவீர்களாக; வேதங்களை உரைக்கின்ற உண்மையும் இதுவாகும்; யான் ஒரு பக்கமாக இருந்து சொல்லாமல் நன்கு எண்ணி நடுநிலையில் நின்ற நவில்கின்றேன். எ.று

     நாதம், சிவதத்துவமாகிய உச்சியில் உள்ள நாத தத்துவம். அத்தத்துவத்தில் விளக்கமுறுவது பற்றி, “நாதம் சொல்கின்ற அம்பலம்” என்று நவில்கின்றார். நித்தர்கள் - அழியாத இன்ப வாழ்வில் நிலையாக இருப்பவர்கள். வாதம் பிரதிவாதம் என்ற இரண்டினுள் ஒரு பட்சமாக இருந்து சொல்லுவதன்று என்றற்கு, “பக்க வாதம் சொல்கிலேன்” என்று கூறுகின்றார். பட்சம் பக்கம் என வந்தது. நடுநின்று சொல்கின்றேன் என்றது வற்புறுத்தற் பொருட்டு.

     (4)