5549. ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.
உரை: உலகத்து நன்மக்களே! ஆகமங்களின் முடிவும் வேதங்களின் முடிவும் எடுத்துரைக்கின்ற பகுதியாக பரவெளியில் நடைபெறும் சிவனுடைய திருநடனத்தைப் பொருளாகக் கொண்டு போற்றி வழிபடுவீர்களாக; இதனை உலகியல் மோகத்தில் மயங்கிக் கிடப்பவர்களுக்கு நான் உரைக்கின்றேன் இல்லை; ஞான இன்பத்தைப் பெறக் கருதும் யோக ஞானிகளுக்குக் காலம் என்பது கருதி எடுத்துரைக்கின்றேன். எ.று.
ஆகமாந்தம் என்பது சிவாகமங்களின் ஞானப் பாகம். ஏனையவை சரியை கிரியை யோக பாகங்களாகும். வேதாந்தம் என்பது வேத முடிவுகளை உரைக்கும் உபடநிடதங்கள். அறைதல - சொல்லுதல். பாகம் - பகுதி. நாதாந்தமாகிய பரவெளியில் நிகழும் சிவானந்தத் திருநடனத்தையே வைதீக ஞானமும் சிவாக ஞானமும் சிறந்த பகுதியாக எடுத்துரைக்கின்றன என்பதை எடுத்துக் கூறுகின்றார். உலகியற் போக போக்கியங்களை நாடி நிற்பவர்களை, “மோக மாந்தர்” என மொழிகின்றார். சுகம் - ஈண்டுச் சிவஞான இன்ப வாழ்வு குறிப்பதாம். யோக மாந்தர் - சிவயோகிகளும் சிவஞானிகளும் ஆவர். அவர்கட்கும் எடுத்துரைப்பதற்கு இது காலமாம் என்பாராய், “காலம் உண்டாகவே உரைத்தேன்” என்று கூறுகின்றார். (6)
|