பக்கம் எண் :

5550.

          வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும்
          ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும்
          ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும்
          ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே.

உரை:

     மக்கள் பிறந்தும் இறந்தும் காலத்தை வீண் போக்குகின்ற இவ்வுலகக் காட்சியில் மயங்கி இருக்கும் பெருமக்களே! இப்பொழுதே எம்மிடத்து வருவீர்களாக; நீவிர் காணும் இக்காட்சிகளால்பயனில்லை; தேவருலகத்துத் தேவர்களும் அடைதற்கரிய ஞான சபையிலே நடித்தருளும் சிவபெருமானுடைய ஞான நாடகக் காட்சியையே நாம் கண்டு களித்தல் வேண்டும். எ.று.

     ஊன நாடகம் என்பது உலகில் மக்கள் பிறந்து வாழ்ந்து இறந்தொழியும் செயல். இச் செயல்களைக் காண்பதால் பயன் சிறிதுமில்லை என்பாராய், “காலத்தை ஒழிக்கும் ஈன நாடகம்” என்று இயம்புகின்றார். பெரியார்காள் என்பது வஞ்சப் புகழ்ச்சி. ஈன நாடகம் என்பதற்கு இவ்வுலக வாழ்வு என்று பொருள் கூறுவதுமுண்டு. வான நாடர் - தேவருலகத்துத் தேவர்கள். படைத்தல, காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழிலும் நிகழுமாறு இறைவன் ஆடும் திருக்கூத்தாகும்.

     (7)