5554. கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை
நிதிஇ ருக்கின்ற தாதலால் நீவிர்கள் எல்லாம்
பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்
விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே.
உரை: சிவகதியாகிய திருச்சிற்றம்பலத்தின்கண் சிவமாகிய அருட் செல்வம் இருக்கின்றதாததால் நீங்கள் எல்லோரும் அதன் திருவடி நீழலில் இப்படியே பொருந்துவதற்கு வருவீர்களாக; யாம் சொல்வதை விடுத்துக் கொலை முதலிய பாதகங்களையே விரும்புவீர்களாயின் பலவேறு சமயங்களாகிய வெவ்விய சுரத்தின்கண் உங்கள் தலைவிதியை நொந்துகொண்டு செல்வீர்களாக. எ.று.
சிவபோகத்தை நுகர்கின்ற ஆன்மாக்களுக்கு முடிவிடமாதலால் அதனை “கதி, இருக்கின்ற திருச்சிற்றம்பலம்” என்றும், சிவன் கருணாகரனாதலால் அவனை, “கருணை நிதி” என்றும் உரைக்கின்றார். வேறு சமயங்களை விரும்பாமை தோன்ற, “சமய வெப்பகத்தே போமினோ” என்று சாற்றுகின்றார். கொலை என்றதினால் கொலை, புலைகள், காமம், களவு என்ற ஐந்தும் கொள்ளப்படும். வெப்பகம் - வெப்பத்தைச் செய்யுமிடம்; அஃதாவது, வெய்யில் வீற்றிருந்த வெவ்விய பாலை நிலம் என அறிக. (11)
|