132. உலகர்க்கு உய்வகை கூறல்
அஃதாவது, உலகத்து நன்மக்களுக்கு இம்மை மறுமைகட்கு நலம் பயக்கும் நல்லுரைகளைக் கூறுதல்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 5556. கட்டோ டேகனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
பட்டோடே பணியோடே தரிகின்றீர் தெருவில்
பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை: உலகியற் பித்துக் கொண்ட பெருமக்களே! கட்டும் கனவுமாக வாழ்கின்றோம் என்று சொல்கின்றீர்கள்; ஆனால் கண்ணும் கருத்துமாக இறைவனை நினைக்கின்றீர் இல்லை; பட்டாடையும் பொன் ஆபரணமும் அணிந்து திரிகின்றீர்; ஆயினும் தெருவில் பசியுடன் வந்தவர்களைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்; கொட்டும் முழக்கமும் கொண்டு தெருக்களில் கோலம் வருகின்றவர்களைப் பார்க்கின்றீர்களே அன்றி நற்குணங்களோடும் நல்ல கருத்துக்களோடும் பெரியோர்களே குறித்துரைப்பதை நினைக்கின்றீர்கள் இல்லை; எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணத் தெரியாத வர்களாகிய நீங்கள் எதனைத் துணையாகக் கொண்டு உய்தி பெறப் போகின்றீர்கள். எ.று.
கட்டு - இனத்தோடு கூடிச் சாதி ஆசாரக் கட்டோடு அன்பு கொண்டு வாழ்தல். கனம் - பெருந்தன்மை. கருத்தன் - கருத்தில் உறையும் இறைவன். பட்டு - பட்டாடை. படி - பொன்னால் செய்த ஆபரணங்கள். கொட்டும் முழக்கம் என்பது பல்வகை வாத்தியங்களைக் குறிப்பது. குணம் - நற்குணம். குறிப்பு - நல்ல அறிவுரைகள். இவற்றைக் குறிப்பவர்கள் பெரியோர்கள் ஆதலால் “குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்” என்று கூறுகின்றார். சில விடயங்களையும் அறியாது ஒழிகின்றனர் என்பதற்கு, “எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்” என்று அறிவிக்கின்றார். பித்துலகீர் - உலகியல் வாழ்வில் ஆசையுற்று வாழ்கின்றவர்கள். கட்டும் கனமும், பட்டும் துணியும், கொட்டும் முழக்கமும் இம்மை மறுமைகளுக்குத் துணை செய்வன அல்ல என்பது கருத்து. எட்டும் இரண்டும் சேர்த்து எண்ணவும் அறியீர் என்பதற்கு எட்டும் இரண்டும் சேர்த்துப் பத்தாம் என்று அறியா தொழிகின்றீர். பத்தாவது இறைவன்பால் கொள்ளுகின்ற பற்று என்பது இறைவன் பால் கொள்கின்ற பற்றே இருமைக்கும் துணையாவது என்பதாம். (1)
|