5565. பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
பகராத வன்மொழி பகருகின் றீரே
நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
உரை: உலகியற் பொய் வாழ்க்கையில் ஆசை மிகுந்து அலைகின்ற மக்களே! நாங்கள் செய்யத் தகாத தீமைகளைச் செய்கின்றீர்கள்; சொல்லத் தகாத வன்மொழிகளைச் சொல்கின்றீர்கள்; சேரத்தகாத தீயவர்களோடு சேருகின்றீர்கள்; மேற்கொள்ளத் தகாத நடத்தைகள் மேற்கொள்கின்றீர்கள்; இவையே அன்றி உங்களைக் கண்போல் காத்தளிக்கின்ற கருத்தாவாகிய இறைவனை நினைந்து கண்களில் நீர் சொரிந்து வழிபடுகின்றிலீர்; எண்ணக் கூடாதன எல்லாம் எண்ணுதற்குரிய ஒரு காலம் வரும்; அப்பொழுது நீங்கள் எதனைத் துணை கொள்வீர்கள்; உரைப்பீர்களாக. எ.று.
பண்ணுதல் - செய்தல். துன்பம் தருவனவற்றைத் தீமைகள் என்று குறிக்கின்றார். தீயினம் - தீமையை உண்டுபண்ணும் அற்பர்கள் கூட்டம். நடத்தைகள் - செயல் வகைகள். இதுகாறும் எண்ணியிராத எண்ணங்களை மனத்தில் நினைந்து வருந்தும் காலம் உயிர் போகும் காலம் என அறிக. அக்காலத்தே நல்ல எண்ணங்களே தோன்றி மகிழ்வு செய்யுமாதலால் அதனைக் குறிப்பதற்கு, “எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம்” என்று நேர்பட மொழிகின்றார். (10)
|