பக்கம் எண் :

5569.

     பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
          புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
     கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
          களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
     ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
          அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
     மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
          மேவியதீண் டடைலிரேல் ஆவிபெறு வீரே.

உரை:

     கொடிய செயல்களுக்கு முயற்சி செய்யும் உலக மக்களே! பொய்யானவற்றைச் சொல்லிப் பின்னர் அவற்றை விளக்க முற்பட்டுக் காலத்தை வீணே கழிக்கின்றீர்கள்; புலைச் செயலும் கொலை வினையும் புரிந்து ஆரவாரம் செய்கின்றீர்கள்; கையில் விளக்கேந்திக் கொண்டு சென்று பாழுங் கிணற்றில் வீழ்கின்ற அறிவிலிகள்போல அறிவு மயங்குகின்றீர்கள்; நல்லறிவு பெற்றிருந்தும் அதனைப் பயன்படுத்துகின்றீர்கள் இல்லை; வியப்பை விளைவிக்கும் மூப்பு சாக்காடு முதலியவற்றை நினைத்தால் உங்கள் அடிவயிறு முறுக்கி வருத்துமல்லவா? உங்களுக்குத் திருவருள் ஞானத்தின் மெய்ம்மையை விளக்குதற்கு எனது தந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளும் சமயம் எய்திவிட்டதால் நீங்கள் இங்கு வருவீரேல் உங்கள் உயிர்க்கு உறுதியைப் பெறுவீர்கள். எ.று.

     முதற்கண் பொய்யை உரைத்துப் பின்னர் அதனை வற்புறத்துவதற்குப் பல கூறுவதால், “பொய் விளக்கப் புகுகின்றீர்” என்றும், எப்படி விளக்கினும் பொய்யேயாதலால் அதனால் காலம் கழிவது நினைந்து, “போது கழிக்கின்றீர்” என்றும் புகல்கின்றார். கலகல என்றல் ஆரவாராமாகப் பேசுதல். களியர் - கள் குடித்து மயங்கினவர். களித்தல் - மகிழ்தல்; கருத்து இங்கு நல்லறிவின் மேல் நின்றது. அச்சம் மிகுந்த வழி வயிறு குழம்பி மெலியுமாதலால், “அடி வயிற்றை முறுக்காதோ” என்று உரைக்கின்றார். உயிர்க்கு உறுதியானவற்றைப் பெறுவதை, “ஆவி பெறுவீர்” என்று அறிவிக்கின்றார். மேவியது - வந்து விட்டது.

     (4)