5570. எய்வகைச்சார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்
எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் எனது
கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்
கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்
அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.
உரை: மனத் தளர்வை உண்டுபண்ணும் மதங்களையும் பொய் புனைந்துரைக்கும் சாத்திரங்களையும் எடுத்துச் சொல்லி இது எங்களுடைய தெய்வம் என்று பலமுறையும் கீழ்மை உரைகளைப் பேசுகின்ற உலக மக்களே! தெய்வம் ஒன்றே என்பதை அறியாது இருக்கின்றீர்கள்; யானையைக் கண்டு அதன் கையையும் காலையும் கையாற் தடவிப் பார்த்து இதுவே யானை என்று கலகம் புரிந்த பெரிய மூடர்களிலும் மூடர்களாக இருக்கின்றீர்கள்; நிலம் நீர் முதலிய ஐவகைப் பூதங்களில் பரிணாமமாகிய உங்கள் உடம்பு இறந்து அழிந்து விட்டால் என்ன செய்வீர்கள்; உங்களுக்கு அழிந்து கெடும் இவ்வுடம்பை அழியா உடம்பாக ஆக்கும் வகைதெரியாது நீங்கள் உய்தி பெறும் பொருட்டு என்னுடைய ஒப்பற்ற தந்தையாகிய சிவபெருமான் வந்தருளும் சமயம் வந்துவிட்டது; ஆதலால் எம்பால் வருவீர்களாக; வந்து இன்ப நிலை பெறுவீர்களாக. எ.று.
எய்வகை - மனம் தளரும் நெறி. எய்தல் - ஈண்டுத் தளர்ச்சி குறித்து நின்றது. “ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து” (திருவா) என்று வருவதனால் அறிக. ஒன்று கூறுவது போலக் கூறாமல் வேறுபட்டுப் பொய்யும் புனைந்துரையும் நிறைந்தவை என்பதற்கு, “பொய்வகைச் சாத்திரங்கள்” என்று புகல்கின்றார். கை -சிறுமை; கீழ்மையுமாம். பிறவிக் குருடர் சிலர் யானையைக் காணச்சென்று அதன் கையையும் காலையும் காதையும் தடவிப் பார்த்து யானையாவது உரல் போல்வது முறம் போல்வது என்று சொல்லி ஒருவரோடு ஒருவர் கலகம் விளைவித்துக் கொண்ட கதை இங்கே, “கரி பிடித்துக் கலகமிட்ட பெரியர்” என்று குறிக்கப்படுகிறது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐந்தின் பரிணாமமே உடம்பு என்று பெரியோர் கூறுவதுபற்றி, “ஐவகைய பூத உடம்பு” என்று கூறுகின்றார். அழியாமை ஆக்கும் வகை - மரணமின்றி வாழும் உடம்பு பெறுதல். உய்வகை - திருவருள் ஞானத்தை நல்கிச் சன்மார்க்கம் ஆக்கும் நிலை. உவப்பு - அருள் ஞான இன்பம். (5)
|