பக்கம் எண் :

5571.

     உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
          உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
     மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
          வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
     இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
          எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
     நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
          நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.

உரை:

     அறியாமையை உடைய உலகத்தவர்களே! உடம்பு வரும் வகையையும் உயிர்களின் வகையையும் அறிய மாட்டீர்களே அன்றி உடல் பெருக்க உணவை உண்டு உறங்குவதற்கு மட்டும் நன்கு அறிவீர்கள்; மடமை பொருந்திய பேய்த் தன்மையை யுடைய மனத்தைக் கொண்டு உணர்வு மயங்குகின்றீர்கள்; ஆனால் மனத்தை உங்கள் வசப்படுத்தாமல் விடுகின்றீர்கள்; வசப்படுத்தும் வகைகளையும் நெறிகளையும் அறிகின்றீர்கள் இல்லை; உலகில் இடம் பெறுகின்ற பொய்யான வாழ்க்கையிலே வருகின்ற இன்ப துன்பங்களை அடுத்தடுத்து நினைத்து உடல் இளைக்கின்றீர்கள்; அம்பலத்தில் ஆடுகின்ற ஒப்பற்ற தனது தந்தையாகிய சிவபெருமான் என்பால் வந்தடையும் சமயம் இதுவாகும்; ஆதலால் என்பால் வந்து புண்ணியப் பயனை அடைவீர்களாக. எ.று.

     உடம்பு வரும் வகையையும் உயிர் வந்தடையும் இயல்பையும் அறியாதபடியால் உலக மக்களை, “ஏழை உலகீர்” என்று கூறுகின்றார். அறியாமை பொருந்திய பேயின் தன்மையையுடைய மனதினால் பலவேறு எண்ணங்களைக் கொண்டு அறிவு மயங்குதல் பற்றி, “மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர்” என்றும், இந்த மனத்தையும் உங்கள் அறிவின் வழியிலே ஒழுகும்படியாக நிறுத்துகின்ற வழி துறைகளும் உண்டு அவற்றை நீங்கள் கற்கின்றீர்கள் இல்லை என்பாராய், “மனத்தை வசப்படுத்தீர் வழிதுறை கற்றறியீர்” என்றும் கூறுகின்றார். நிலையில்லா வாழ்க்கையாதலால் உலக வாழ்வை, “இடம் பெறு பொய் வாழ்க்கை” என இசைக்கின்றார். இன்பத்தில் மகிழ்ந்தும் துன்பத்தில் தளர்ந்தும் இடர்ப்படுகின்றபடியால், “எண்ணி எண்ணி இளைக்கின்றீர்” என்று கூறுகின்றார். திருநடம் புரியும் சிவபெருமான் வருகின்ற இதுவாதலால் இதனைக் கைவிடாது எங்கள்பால் அடைவீர்களாயின் நீங்கள் சிவபுண்ணியப் பயனைப் பெறுவீர்கள் என வற்புறுத்துவதற்கு, “நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே” என உரைக்கின்றார்.

     (6)