5573. கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே
களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ
செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ
தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே
திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே
மனமகிழ்ந்து கேட்கின்ற வரம்எல்லாம் எனக்கே
வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே.
உரை: யாங்கள் கனமும் கட்டும் உடையவர்களாவோம் என்று நினைத்துக்கொண்டு உலகில் மகிழ்ந்து செருக்கி இருக்கின்றீர்கள்; ஆயினும் வரப்போகும் எமனிடமிருந்து ஒளிந்துகொள்ளும் இடத்தை அறிகின்றீர்கள் இல்லை: கோபம் பொருந்திய எமன் ஒருநாள் வருவான் என்னும் செய்தியை அறியாமலும் செத்து மறைந்த உங்கள் இனத்தாரைச் சிறிது பொழுதும் நினைக்க மாட்டீர்கள்; நினையாமலும் இருக்கின்றீர்கள்; சூரியன் போலச் சாவாத உடம்புடையவர்களே திருவுடையவர்கள் ஆவார்கள் என்றறிந்து இப்பொழுதே என்பால் சேர்ந்து கொள்ளுங்கள்; மனமகிழ்ச்சியுடன் கேட்கும் வரங்கள் எல்லாவற்றையும் எனக்குத் தரும் பொருட்டு எனது ஒப்பற்ற தந்தையாகிய சிவன் வரும் காலம் இதுவாகும் என அறிந்துகொள்மின். எ.று.
இறுமாந்திருத்தல் - செருக்கியிருத்தல். ஒளிப்பிடம் - மறைந்து கொள்ளும் இடம். கோபமே உருவாக வுடையவனாதலால் எமனை, “சினமுடைய கூற்று” எனத் தெரிவிக்கின்றீர். செத்த இனத்தாரை நினைந்த வழி நாமும் சாதல் நிச்சயம் என்பது விளங்க, “செத்து நுமது இனத்தாரைச் சிறிதும் நினையீரோ” என்று கூறுகின்றார். தினகரன் - சூரியன். மாலையில் மறைந்து காலையில் எழுந்து திகழ்வது பற்றி, “தினகரன் போல் சாகாத தேகம் உடையவரே திருவுடையார்” என்று
தெளிவிக்கின்றார். திரு - அருள் ஞானச் செல்வம். வரம் தருதற்குச் சிவபெருமான் வருகின்றாராதலால் நீங்களும் வந்தால் வரம் பலவும் பெறலாம் என்பது கருத்து. (8)
|