பக்கம் எண் :

5575.

     கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்
          கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
     மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ
          மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
     திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்
          சித்திபுரம் எனஓங்கும் உத்தரசிற் சபையில்
     சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது
          தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.

உரை:

     மனம் முதலிய கரணங்களும் கண் முதலிய கருவிகளும் மகிழ்ச்சி மிகக் குடல் சூழ்ந்த உலகங்களையும் வானத்தையும் ஆட்சி புரிகின்ற அதிபதிகள் என்று மகிழ்கின்றீர்கள்; அதிபதிகளாகிய நீங்கள் மரண பயத்தைப் போக்கிக்கொள்ளாமல் வாழ்வதால் யாது பயன்? அறிவு மயங்காமலும் உடல் வருந்தாமலும் இவண் வருவீர்களாக; சிறு துரும்பும் தனதருளால் படைத்தல் முதலிய ஐவகைத் தொழிலும் செய்யுமாறு அருள் ஞான ஒளியை நல்கும் சித்திபுரம் என்று சொல்லப்படும் உத்தர சிற்சபையில் தனது திருவடி இரண்டையும் எனக்குத் தந்து என்னையும் சிவமாக்கும் பொருட்டு எனது ஒப்பற்ற தந்தையாகிய சிவன் எழுந்தருளும் சமயம் இதுவாகும். எ.று.

     கரணம் - மனம் சித்தம் அகங்காரம் புத்தி என்னும் நான்குமாம். கருவி - கண் காது மூக்கு வாய் உடம்பு என்ற ஐந்துமாம். கரணம் கூறவே கருவிகளும் உடன் கொள்ளப்பட்டன; அதிபதி - மிக்க பெருந்தலைவர். மயங்குதல் - அறிவு மயங்குதல். உயங்குதல் -உடம்பு வருந்துதல். திரணம் - துரும்பு. ஐந்தொழில் - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல். ஒளி என்றது திருவருள் ஞான ஒளியை. வடலூர்க்குச் சித்திபுரம் என்னும் பெயராதலின் அதனை எடுத்து ஓதுகின்றார். வடலூர் ஞான சபையை உத்தர ஞானசபை என்பவாதலின், “உத்தர சிற்சபை” என்று உரைக்கின்றார். சரணம் - திருவடி. சிவத்தைக் கண்டவிடத்துக் காணும் சீவனும் சிவமாம் என்பது பற்றி, “எனையும் தானாக்க” என்று இயம்புகின்றார். இவ்வாற்றான் இப்பாட்டுக்கள் பத்தும் சித்திபுரம் என்னும் ஊரிலுள்ள உத்தர ஞான சபையைச் சிறப்பித்துப் பாடியனவாம் என்று உணர்க.

     (10)