பக்கம் எண் :

5577.

     புகுந்தருணம் இதுகண்டீர் நம்பவரே நான்தான்
          புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
     உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
          உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
     மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே
          மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
     தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
          சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.

உரை:

     உலகத்து நன்மக்களே! நம்முடைய கூத்தப்பெருமான் சிற்சபையில் புகுந்தருளும் தருணம் இதுவாகும் என அறிவீர்களாக; நம்முடைய இனத்தவராகிய உங்களுக்கு நானே சொல்லுகின்றேன்; என்னுடைய சொற்களை பொய் என்று எண்ணாதீர்கள்; அறியாமையைப் போக்கும் தருணத்தைப் பொருந்தியவர்களும் அது நீங்கப் பெற்றவர்களும் மற்றவர்களும் நாம் கொண்டுள்ள உடைமைகளும் உலகியல் வாழ்வும் நிலைத்த துணையாகாதாதலால் மிகுந்த சுவைபொருந்திய கரும்பே என்றும், செவ்விய கனியே என்றும் கொம்பிடைப் பெறப்பட்ட தேனே என்றும், மெய்யாயப் பயனை விளைவிக்கும் பரம்பொருளே என்றும், கைம்மேல் கிடைத்த செம்பொருளே என்றும், விலையில்லாத மாணிக்க மணியே என்றும், எமக்கேற்ற ஒப்பற்ற பெரும்பதியே என்றும், தயாநிதியே என்றும், சிவகதியே என்றும், சத்தியப் பொருளே என்றும் மனத்தால் நினைந்து வாயாற் சொல்லிப் பத்தியோடு பணிந்து உரைப்பீர்களாக. எ.று.

     உண்மையே உரைக்கின்றேன் என்பதை வற்புறுத்துவதற்கு, “பொய் மொழி என்னாதீர்”என்று புகல்கின்றார். உகுந் தருணம் - அறிந்தோர் அறிவுரையை ஆர்வமுடன் கேட்டு அறியாமை நீங்கும் சமயம். உயிர் நீங்கும் தருணம் என்று பொருள் கூறுவதுமுண்டு. ஆனால் அது உற்ற துணையன்று என்பதனோடு பொருந்தாமை அறிக. உற்ற துணை - நிலைத்த துணை. மரக் கொம்புகளில் அமைந்த தேன் கூட்டிலிருந்து இறக்கப்பட்ட தேனைக் “கோற்றேன்” என்று கூறுகின்றார். மெய்ப்பயன் - நிலைத்த பயனை விளைவிக்கும் மேலான பொருள். கைப்பொருள் - வேண்டும்போது எடுத்துப் பயன்படுத்தும் சிறந்த பொருள். சிவபோகம் நுகரும் இடமாதலின் சிவத்தை, “சிவகதி” என்று சிறப்பிக்கின்றார்.இதனால் மரணமிலாப் பெருவாழ்வு பெறுதற்குப் பத்தியோடு சிவத்தை நினைந்து போற்றிப் பணிதல் வேண்டும் என்பதாம்.

     (2)