பக்கம் எண் :

5581.

     தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
          சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
     ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
          அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
     ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
          ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
     நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
          நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.

உரை:

     உலகத்து நன்மக்களே! தீமைகள் யாவற்றையும் நன்மையென்று கருதித் திருவுள்ளத்திற்கொண்டு சிறியவனாகிய எனக்கு அருளமுதத்தின் தெளிவை நல்கிய நலத்தைக் கொண்டு துன்பம் நீக்கி இயற்கை இன்ப அனுபவ மயமாய் அம்பலத்தில் விளங்குகின்ற அருட்பெருஞ் சோதி ஆண்டவனும், ஒப்பற்ற ஓங்காரமாகிய உயர்ந்த வடிவுடைய பெருமக்களின் மனத்தில் நிறைந்துள்ள ஒப்பற்ற பரம்பொருளுமாகிய பெரிய கருணையையுடைய பெருமகனாகிய சிவனை நாம் கலந்து அழியாத இன்பத்தைப் பெறலாம்; ஆதலால் அதற்கு இஃது ஒரு நல்ல தருணமாதலால் விரைந்து வருவீர்களாக. எ.று.

     தீமைகள் - குற்றங்கள். திருவருள் ஞானத்தை, “அருளமுதத் தெளிவு” என்று குறிக்கின்றார். ஆமயம் - துன்பம். தன்னியல்பில் தானாகவே நின்று இன்ப அனுபவ வடிவாய் இருப்பதுபற்றி அருட் சோதி ஆண்டவனை “இயற்கை இன்ப அனுபவமே மயமாய் விளங்குகின்ற அருட்பெருஞ்சோதி” என்று புகழ்கின்றார். பிரணவோபாசனை உடைய பெரியோர்களை, “ஓமயவான் வடிவுடையார்” என்று பாராட்டுகின்றார். பிரணவாகாரப் பெரும் பொருளை, “ஒரு பொருள்” என்று உரைக்கின்றார். இதனால் இயற்கை இன்ப அனுபவமே மயமாய் விளங்குகின்ற அருட்பெருஞ் சோதியும், பிரணவப் பொருளும், பெருங்கருணையையுடைய பெருமானாகிய சிவனை நாம் கலந்து கொண்டால் மரணமில்லாத பெருவாழ்வு பெறலாம் என்று தெரிவித்தவாறாம்.

     (6)