5585. ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
ஏசறநீத் தெனை ஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
முக்காலத் தினும்அழியா மூர்த்தம் அடைந் திடவே.
உரை: உலகத்து நன்மக்களே! உண்மையில் ஆசை இருந்தால் எம்பால் வருவீர்களாக; அருட் சோதியையுடைய பெருமானாகிய சிவ பரம்பொருள் அம்மையும் அப்பனுமாய் அருள்புரியும் வள்ளலாதலால் என் வருத்தத்தைப் போக்கி என்னையும் ஆட்கொண்டு நான் எண்ணியவாறு அளித்து எல்லாம் செயல் வல்ல சித்தன் என் உயிரோடு உயிராய்க் கலந்து கொண்டான்; அப்பெருமான் ஞான ஒளியையுடைய அம்பலத்தில் அருள் நிறைந்த ஞானக்கூத்தை நிகழ்த்த திருவுள்ளம் கொண்டு வருகின்ற திருநாள் இதுவாதலால் முக்காலத்தும் அழியாத உரிமை அடைதற்கு வந்து சேர்வீர்களாக; நான் சொல்லும் இதனைப் பொய்யுரை என்று நினைத்து மயங்கவேண்டாம். எ.று.
அம்மையும் அப்பனுமாகிய ஒரு திருவுருவை உடையவனாதலால் அருட்சோதி ஆண்டவனை, “அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன்” என்று போற்றுகிறார். ஏசறவு - துன்பம். வரம்பில் ஆற்றல் உடையவனாதலால், “ எல்லாம் செய்வல்ல சித்தன்” என்று கூறுகின்றார். தேசு - ஞான ஒளி. பொது - அம்பலம். சித்தி நடம் - ஞானத் திருக்கூத்து. மோச உரை - பொய்யுரை. மூர்த்தம் - உருவம். மரணமிலாப் பெருவாழ்வு என்பதற்கு, “முக்காலத்தினும் அழியா மூர்த்தம்” என்று மொழிகின்றார். இதனால், எக்காலத்தும் அழியாத பெருவாழ்வு பெற ஆசை உடையவர்களாயின் அம்பலத்தில் அருள் சித்தி நடம்புரிவதற்கு அவன் எழுந்தருளும் திருநாள் இதுவே என உணர்ந்து வந்து சேருங்கள் என்பதாம். (10)
|