5588. உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.
உரை: உலகத்து நன்மக்களே! உண்மையை உள்ளபடி எடுத்துரைக்கின்றேன்; ஆதலால் இங்கே என்பால் வந்து அடைவீர்களாக; நான் உரைக்கும் இதன்கண் சந்தேகம் கொண்டு கண்டபடிப் பேசிக் கெடுதல் வேண்டா; இதனை உரைக்கும் என்னை எளியவன் என நினைந்து புறக்கணிக்க வேண்டா; எல்லாம் செய்ய வல்லவனாகிய சிவபரம்பொருள் என்னுள் எழுந்தருளி இருக்கின்றான்; ஆதலால் சொல்லும் இதனை உவந்து கேட்பீர்களாக; குளிர்ந்த மனத்துடன் சுத்த சிவ சன்மார்க்கமாகிய இந்நெறியை விரைவில் சார்ந்து கடைத்தேறுவீர்களாக; உங்கட்கு நித்திய இன்ப வாழ்வளிக்க இரக்க உணர்வை நல்கும் பெரிய கடவுளாகிய சிவன் எனச் சொல்லப்படும் கருணைச் செல்வன் இங்கே எழுந்தருளும் தருணம் இதுவாகும் என அறிவீர்களாக. எ.று.
சந்தேகித்தல் - சந்தேகம் கொள்ளுதல். வாயில் வந்தபடி நினைவின்றிப் பேசுவது கெடுதி விளைவிக்குமாதலால், “உளறி வழியாதீர்” என்று அறிவுறுத்துகின்றார். எண்மை நான் - எளியவன். தண்மை - குளிர்ச்சி; ஈண்டு அன்பு குறித்து நின்றது. ஏறுதல் - கடைத்தேறுதல். சத்திய வாழ்வு - உண்மையான இன்ப வாழ்வு. கண்மை - இரக்கம். கருணை நிதி - கருணையாகிய செல்வத்தை உடையவன். இதனால், எல்லாம் செய்யவல்ல சிவபெருமான் என்னுள் இருக்கின்றானாதலால் நான் உரைக்கும் இதனைக் கேட்டுச் சுத்த சிவசன்மார்க்கச் சிவநெறியைச் சேர்ந்து கடைத்தேறுமின்; அவன் இன்ப வாழ்வு அளிக்க எழுந்தருளும் சமயம் இதுவாகும் என்று தெளிவித்தவாறாம். (13)
|