பக்கம் எண் :

5589.

     தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
          தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
     வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
          வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
     தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
          சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
     ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
          உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.

உரை:

     உலகத்து நன்மக்களே! தனிமூர்த்தியாகிய தானேயாகியும் பிற யாவும் தானாகியும் அவை அல்லனாகியும் ஒப்பற்ற தலைவனாய் எனக்குத் தந்தையும் தாயும் ஆகிய சிவபெருமானை வானாகிய பூதமும் அதற்கு உள்ளீடாகிய கருவும் அக்கருவுக்கு முதலாகிய பொருளும் ஆகிய வள்ளலே என்று மெய்யன்பர்கள் எல்லாரும் நினைந்து போற்றுகின்றவனும் தேனும் செம்பாகும் இனிக்கின்ற தெளிந்த அமுதமுதமாகியவனும் ஞான சபையில் திருக்கூத்தாடி இன்ப வாழ்வு அளிப்பவனுமாகிய சிவபெருமானை மனத்திற்கொண்டு போற்றுவீராக; அதனால் மரணமில்லாத பெருவாழ்வைப் பெற்று நெடிது வாழக் கூடிய மேன்மையான சித்திகளைப் பெறுவீர்கள்; நான் சொல்லும் இது சத்தியம். எ.று.

     வானமாகிய பூதத்திற்குரிய தன்மாத்திரையை, “வான் கரு” என்றும், அக் கருவை தன்கண் கொண்ட மாயையாகிய முதற் பொருளை, “கரு முதலே” என்றும் குறிக்கின்றார். சிற்சபை - ஞான சபை. தானேயாதலாவது உலகத் தொடர்பின்றித் தனித் திருமூர்த்தியாய் விளங்குதல். பெருவாழ்வு நல்குபவனைப் “பெருவாழ்வு” என்று உபசரிக்கின்றார். மரணமில்லாத நித்திய வாழ்வை, “ஊனேயும் உடலழியாது ஊழிதொறும் ஓங்கும் உத்தம சித்தி” என்று விளக்குகின்றார். தசை பொருந்திய உடம்பு என்றற்கு, “ஊனேயும் உடல்” என உரைக்கின்றார். உத்தம சித்தியைக் காய சித்தி என்பதும் வழக்கு. இதனால், எல்லாமாகியும் அல்லதுமாகியும் உள்ள சிவ பரம்பொருளைச் சிந்தை செய்தால் மரணமின்றி நெடிது வாழும் உத்தம சித்தியைப் பெறலாம் என உலகத்து நன்மக்கட்கு எடுத்துரைத்தவாறாம்.

     (14)