5592. முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.
உரை: உலகில் வாழும் நன்மக்களே! உலகில் பல வகையில் முயன்றும் ஒரு பயனையும் அடையாத மூடத் தன்மை பொருந்திய மதங்கள் அனைத்தும் விரைந்து அழியவும் ஒரு குற்றமுமில்லாமல் அமைந்த ஒப்பற்ற சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும் எங்கள் இறைவனாகிய சிவபெருமான் நம்பால் எழுந்தருளுவதற்கு இது தருணமாகும்; ஆகவே உறக்கத்தின் நீங்கி எழுந்திருப்பவர் போலச் செத்தவர்கள் பலரும் எழுந்திருப்பது இன்று தொடங்கி நிகழும்; ஆதலால் நீங்கள் அதனைப் பழகி அறிவதற்கு விரைந்து வருவீர்களாக; வந்தால் இதுவரையில் படித்திராத படிப்பையும் சுகத்தையும் பெறலாம். எ.று.
உண்மை யுணராமல் வெறும் வழிபாட்டோடு நிற்கும் மதம் “பயன் அடையா மூட மதம்” எனப்படும். உயிர்க்கொலை புரிந்து வழிபாடு செய்யும் மதமும் மூடமதமாகும். நிலைத்த பயனைத் தரும் நன்மதத்தை, “மோசமில்லாது இயன்ற சன்மார்க்க மதம்” என்று கூறுகின்றார். மோசம் - மூடப் பழக்க வழக்கங்கள். அஃதில்லாத சன்மார்க்க மதத்தையே இங்கே நிலைபெற வேண்டும் என்பாராய், “சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும்” என்று கூறுகின்றார். “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று பெரியோர்கள் கூறுவதால், “துயின்றுணர்ந்த எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது இது” என்று உரைக்கின்றார். இறந்தவர்கள் எழுகின்ற வித்தை பலகால் பயின்று அறியப்படுவதால், “பயின்றறிய விரைந்து வம்மின்” என்று பகர்கின்றார். இது நூல்களால் பயின்றறியப் படாதது என்பாராய், “படியாத படிப்பு” என்று பகர்கின்றார். இதனால், மூட மதங்கள் அழிந்தொழியும் சன்மார்க்கம் என்றும் எங்கும் நிலைபெறவும் இறைவன் எழுந்தருளும் தருணம் இதுவாகும்; பின்னர் இறந்தவர்கள் எல்லாரும் எழுவது இன்று முதல் நிகழும்; அதுவே யன்றிப் படியாத படிப்பும் சுகமும் பெறலாம்; ஆதலால் இதனைப் பயன்றறிய விரைந்து வருவீர்களாக என்பதாம். (17)
|