5593. சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
சூதறிந்தீர் வாதிறிந்தீர் தூய்மையறிந் திலிரே
இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
தென்புரியவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
அகமறிந்தீர் அனகமறிந் தழியாத ஞான
அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.
உரை: உலகில் வாழும் நன்மக்களே! உங்கட்குச் சுகம் தெரியவில்லையே அன்றித் துன்பம் ஒன்றையே தெளிவாக அறிந்திருக்கீறீர்கள்; சூதும் வாதும் அறிந்திருக்கிறீர்கள் தவிர தூய்மையின் சிறப்பை அறிந்தீர் இல்லை; இம்மை மறுமை என்ற இரண்டையும் இன்னும் அறியவில்லை; உங்கள் கருத்துத்தான் யாதோ? மரணம் வருமானால் எங்கே செல்வீர்கள்? அளவுக்குட்பட்ட அகப்பொருளை அறிந்திருக்கின்றீர்களே ஒழிய அளிவிறந்து அழியாத ஞானமயமான அமுத வடிவத்தைத் தெரிந்திலீர்; அதைப் பெறுவதற்கு இப்பொழுதே அடைவீர்களாக; என்னைக் காணாதவர் போல இருக்கீன்றீர்கள்; என்னை இன்னும் அறியவில்லை போலும்; நான் முத்தர்கள் எல்லாரும் போற்றிப் புகழ்கின்ற அருள் சித்தர்க்கு மகனாவேன் என்று அறிவீராக. எ.று.
சுகம் - இன்ப நிலை. உலகியலில் துன்பங்கள் அடுக்கி வரக் காண்கிறாராதலால், “துன்பம் ஒன்றே துணிந்தறிந்தீர்” என்றும், சூதும் வாதும் வேதனை புரியக் கண்டதுண்டே அன்றித் தூய இன்ப நிலையை அறிகின்றீர் என்பாராய், “சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மை அறிந்திலிரே” என்றும் சொல்லுகின்றார். இகம் - இம்மை வாழ்வு. பரம் - மறுமை வாழ்வு. உம்முடைய கருத்துத்தான் யாதோ என்று கேட்பாராய், “என்னே நும் கருத்து” என்று வினவுகின்றார். அகம் - அளவிட்டறிதற்குரிய பொருள்கள. அனகம் - அளந்து காண முடியாத பரம்பொருள். இனி அகமாவது பாவமுடைய பொருள் என்றும் அனகமாவது பாவமில்லாத தூய பரம்பொருள் என்றும் கூறுவர். சிவானந்த ஞான வடிவத்தை விளக்குதற்கு, “அனகமறிந்து அழியாத ஞான அமுத வடிவம்” என்று குறிக்கின்றார். முகமறிந்தவர் - நன்கு அறியப்பட்டவர். முத்தன் - முத்தி பெறுதற்குரிய ஞானவான்கள். அருட் சித்தர் - அருளறமே சித்தத்தில் கொண்ட ஞானிகள். இங்கே அருள் சித்தர் என்பது அருளே உருவாக அமைந்த சிவனைக் குறிக்கிறது. இதனால், அகமாகிய உலகியற் பொருளை அறிந்திருக்கின்ற நீவிர் அனக வடிவான அழியாத ஞான வடிவைப் பெறலாமாதலால் என்பால் வருவீர்களாக; நான் உங்களின் வேறல்ல; முத்தர்கள் போற்றும் அருட் சித்தரின் மகனாதலால் என்னை அறியாதவர்போல் விலகிப் போகாதீர்கள் என்பதாம். (18)
|