5596. சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
உலகம்எலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.
உரை: உலகத்து நன்மக்களே! உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் வேண்டுவனவற்றை உணர்ந்திருக்கின்றீர்களே தவிர உலகம் எல்லாவற்றையும் ஒருங்குக் காணத் தக்க சூழ்ச்சியை அறியாதிருக்கின்றீர்கள்; சமரச சன்மார்க்கத் திருநெறியைச் சேர்ந்து கொள்ளுதற்கு உடன்படுவீர்களாக; அதுவே பெறுவீர்களாக; அதனைச் சேர்ந்தால் எல்லாச் சித்திகளையும் பெறலாம்; நீண்ட கடல் சூழ்ந்த உலகமெல்லாம் மரணம் ஒன்று உண்டு என்பதை நன்கு அறியும்; மரணம் என்று சொன்னால் சடமாகிய சிறு துரும்பும் அதனை ஏற்பதற்கு விரும்பாது; ஆயினும் வருகின்ற அம்மரணத்தை நாம் தடுத்துக் கொள்ளலாம்; அதற்கு ஒப்பற்ற ஞான சபையில் நிகழ்கின்ற இறைவனுடைய திருக்கூத்தைத் தரிசிப்பீர்களாக. எ.று.
சமரச சன்மார்க்க நெறியே உயர்ந்த நெறி என்றும், அதனை மேற்கொண்டால் எல்லாச் சித்திகளும் நான் கைவரப் பெறலாம் என்றும் விளக்குவாராய், “சமரச சன்மார்க்கத் திருநெறியே பெருநெறியாம்” என்றும், “சித்தி யெலாம் பெறலாம்” என்றும் கூறுகின்றார். ஒருப்படுதல் - இசைதல். கன்ம யோக சித்திகள் மூன்றும் அடங்க, “சித்தியெலாம்” என்று உரைக்கின்றார். ஓர்தல் - உணர்தல். உளவு - சூழ்ச்சி. உலக மக்களின் இயல்பை ஓரிடத்தில் இருந்தவாறே அறிந்து கொள்ளும் நுண்ணுணர்வை, “உளவு” என்று மொழிகின்றார். ஞான சபையில் நடைபெறும் இறைவனது திருக்கூத்தைக் கண்டு தரிசித்தால் மரணத்தைத் தடுக்கலாம் என்பாராய், “மரணத்தைத் தடுத்திடலாம்” என்று இயம்புகின்றார். திரணம் - துரும்பு. அது அறிவில்லாத சடப் பொருளாதலால், “சடம்” என்றும், “ஓர் திரணம்” என்றும் கூறுகின்றார். சம்மதித்தல் - இசைந்து ஏற்றுக் கொள்ளுதல். இதனால், சமரச சன்மார்க்கம் பெருநெறியாதலால் அதனை அடைந்தால் சித்திகளைப் பெற்று உலகனைத்தையும் ஒருங்குக் காணும் உளவறியலாம் என்றும், ஞான சபைத் திருநடனத்தைக் கண்டால் மரணத்தைத் தடுத்திடலாம் என்றும் கூறியவாறாம். (21)
|