பக்கம் எண் :

5597.

     செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
          திருநடஞ்செய் பெருங்கருணைத் திறந்தான்அங் கவனை
     மெய்தாவ நினைத்திடுக சமசசன் மார்க்கம்
          மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினீயிர் எனைத்தான்
     வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
          மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
     பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
          புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.

உரை:

     உலகத்துப் பெருமக்களே, அம்பலத்தில் திருக்கூத்து இயற்றும் பெரிய கருணை உடையவனாகிய சிவபெருமான் நாம் குற்றங்களைச் செய்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்வான்; ஆதலால் அப் பெருமானை மெய்யன்போடு கூடுதற்கு நினைத்தலும் அவனது சமரச சன்மார்க்கத்தை மேற்கொள்ளுதலும் செய்க என்றும் உரைக்கின்றேன்; அதுகுறித்து என்னை நீங்கள் வைதாலும் நான் அதனை வாழ்த்தாகக் கொண்டு மனம் வருந்தேன்; மானத்தையும் கைவிட்டு விட்டேனாயினும் நான் ஒரு சிறிதளவும் பொய் சொல்ல மாட்டேன்; நீங்கள் எல்லோரும் தூயவராதல் பொருட்டு மெய்யே புகல்கின்றேன் ஏற்றுக் கொள்க. எ.று.

     தீமை செய்வது உயிர்களுக்கு இயல்பாதலால் அதனை உயிர்க் குணம் என்று கொண்டு பொறுத்திடுவான் என்பாராய், “செய்தாலும் தீமை எலாம் பொறுத்தருள்வான்” என்றும், அவன் பொறுப்பதற்குக் காரணம் அவன் கருணையே உருவாக உடையவன் என்பார், “பெருங் கருணைத் திறந்தான்” என்றும் புகல்கின்றார். பொது - அம்பலம். மெய்யன்போடு கூடுவதை, “மெய் தாவ நினைத்திடுக” என்று சொல்லுகின்றார். மேவுதல் - விரும்புதல். மேதினி - மண்ணுலகம். மனம் கோணுதல் - மனம் வருந்துதல். மானத்தால் குற்றம் உண்டாதலால் மான உணர்ச்சி இல்லாதவனாயினேன் என்பாராய், “மானமெலாம் போன வழி விடுத்தேன்” என்றும் கூறுகின்றார். பொய்யுரை இன்றி மெய்யே விளம்புவதற்குக் காரணம் கேட்போர் அனைவரும் மனம் மொழிமெய்களில் தூயவராதல் என்பதே ஆகும் என்றற்கு, “நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டு” என்று உரைக்கின்றார். இதனால், உலகவர் வைதாலும் அதனை வாழ்த்தாகக் கொண்டு மனம் வருந்தாமல் அவர்கள் தூய்மையுறும் பொருட்டு மெய்ம்மை புகல்வதையே மேற் கொண்டு அப்பெருமானை மெய்தாவ நினைத்திடுக என்றும், அவனுடைய சமரச சன்மார்க்கத்தை மேவுக என்றும் விளம்பியவாறாம்.

     (22)