5598. பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
புகலுவதென் நாடொறுநும் புந்தியிற்கண் டதுவே
மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.
உரை: உலகத்து நன்மக்களே! இவ்வுலகில் நீங்கள் நுகர்கின்ற சுகபோகங்கள் எலாம் நிலையின்றிக் கெடுவனவாம்; இதனை நான் உங்களுக்கு எடுத்துக் கூற வேண்டியதில்லை; அவை யாவும் நீங்கள் மனமறிய கண்டவையாகும்; மயக்கம் விளைவிக்கும் இவ்வுலகத்தவராகிய நீங்கள் அறியாமை நிறைந்த உலகில் வாளாச் செத்து மடிவது அழகாகாது; மரணமில்லாத பெருவாழ்வைப் பெறுதற்கு எம்பால் வருவீர்களாக; வந்து மெய்ப்பொருள் அமைந்த சுத்த சிவ சன்மார்க்க நெறியில் நின்று பொருந்தி ஞான சபையில் பெறலாகும் அருளமுதத்தை உண்டு அன்பு மிகுந்து அருள் சேர்ந்த உள்ளத்தவராய் வாழ்வீர்களாக; அது கண்டு உம்மோடு கூடியிருக்கப் பலரும் விரும்புவார்களே அன்றி உங்களைத் தடுப்பவர் ஒருவரும் இலராவர். எ.று.
போகம் என்பதினால் சுகமேயன்றித் துக்கமும் கொள்ளப்படும். சுகதுக்கம் இரண்டையும் போகம் என்றே “போக காரிகை” என்னும் நூல் கூறுகின்றது. போகங்கள் யாவும் நிலையின்றிக் கெட்டழிவன எனத் தெளிவுறுத்தற்கு, “பொருட்டல நும் போகம் எல்லாம்” என்றும், “பொய்யாம்” என்றும் எடுத்தோதுகின்றார். புந்தி - மனம். உலகியல் மயக்கத்தை விளைவிப்பதாகலான் அதன்கண் வாழ்வாரை “மருட்டுலகீர்” என்றும், அவரைச் சூழ்ந்து அறியாமை இருள் நிறைந்திருப்பது பற்றி, “இருட்டுலகில்” என்றும் உரைக்கின்றார். மடிதல் - இறத்தல். தெளிவும் இன்பமும் கொண்டு வாழ்வதுபற்றி, மரணமில்லாத சூழ்நிலையை, “மரணமிலாப் பெருவாழ்வு” என்று கூறுகின்றார். சுத்த சன்மார்க்கத்தில் சிவ பரம்பொருள் நிலையாய் விளங்குதலால் அதனை, “பொருட்டிறஞ் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலை” என்று சிறப்பிக்கின்றார். அருள் ஞானம் பொருந்திய சிவநெறியை “அருட் டிறம்” என்று கூறுகின்றார். ஆடுதல் - வாழ்தல். அடுப்பவர் -அன்போடு கூடுபவர். இதனால், உலகியற் சுக போகங்கள் பொய்யாம் என்றும், அறியாமையால் அவற்றில் கிடந்து இறந்தொழிவது நன்றன்று என்றும், மரணமிலாப் பெருவாழ்வில் இன்புறுவது நன்றென்றும், சுத்த சிவசன்மார்க்க நிலையில் நின்று ஞானசபையில் பெறலாகும் அருளமுதத்தை உண்டு அன்புடன் வாழ்வீர்களாக என்றும் தெரிவித்தவாறாம். (23)
|