5599. மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட்டருளம்
பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.
உரை: உலகத்து நன்மக்களே! பின்னர்ப் பார்த்துக் கொள்வோம் என்று சிறிது காலம் தாமதிப்பீரானால் மரணம் என்று சொல்லப்படுகின்ற பெரும் பாவி வந்து வருத்துவமே; ஐயோ, அதை உங்களால் சிறிதும் தடுக்கமுடியாது; சமரச சன்மார்க்க சங்கத்தார்களைத் தவிர பிறர் அதனை எதிர்த்து நின்று தடுக்கவல்லவர் எந்த உலகத்திலும், யாரும் இல்லை என்று அறிவீர்களாக; இது சத்தியம்; என்னுடைய இச்சொல்லை ஏற்றுக்கொண்டு உலகில் நீங்கள் பற்றிய பற்றுக்கள் அனைத்தையும் முற்றும் அறவே விடுத்துத் திருவருளை நல்குகின்ற அம்பலத்தின்கண் இறைவன்பால் பற்று வைப்பீர்களாக; வைத்தால் என்றும் மரணத்துக்கு உள்ளாக மாட்டீர்கள். எ.று.
மற்றறிவோம் என்பதில் மற்று என்பது பின்னர் என்னும் பொருள் தந்து நின்றது. தாழ்த்திருத்தல் - தாமதித்தல். எற்றி நின்று என்பதில் எற்று என்பது எதிர்த்தல் என்னும் பொருளது. எவ்வுலகிலும் எனற்பாலது எவ்வுலகில் என வந்தது. சத்தியம் - உண்மை. உலகியல் வாழ்வில் எதிர்படும் பொருள்களைப் பற்றி யான் எனது என உரிமை கொள்ளுதல். “பற்றிய பற்று” எனப்படுகின்றது. பற்றற விடுதல் - சுத்தமாகக் கைவிடுதல்; முற்ற விடுதல் என்றுமாம். அம்பலப் பற்று - அம்பலத்தில் நடம் புரிகின்ற இறைவன்பால் அன்பு கொள்ளுதல். என்றும் என்பது எதுகை நோக்கி எற்றும் என வந்தது. இதனால், இவ்வுலகத்தில் சமரச சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது வேறு எவரும் மரணம் என்னும் பெரும்பாவியைத் தடுக்க வல்லவரல்லராதலால் என் மொழியை ஏற்றுக்கொண்டு இருவகைப் பற்றுக்களையும் முற்றத் துறந்து அம்பலத்தாடும் இறைவன்பால் பற்று கொள்வீர்களானால் என்றும் மரணத்துக்குள்ளாகமாட்டீர்கள் என்று கூறியவாறாம். (24)
|