5603. சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
நேர்உறவை எவராலும் கண்டுகொளற் கரிதாம்
நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
உள்ளம்எலாம் கனிந்துருகி உள்ளபடி நினைத்தே.
உரை: உலகத்து நன்மக்களே! உலகியல் மயக்கத்தை நீக்கினவருடைய மனத்தின்கண் நிலையாய் இருந்தருளும் உத்தம சற்குருவும், நேராகச் சென்று யாராலும் கண்டுகொள்ள முடியாத நித்தியமாகிய பெரிய பொருளும், எல்லா ஞான நிலைகளும் தானேயாய் அழகுற விளங்குகின்ற இயற்கை உண்மைப் பொருளும், எல்லாவற்றையும் செல்லவல்ல வல்லமையாகிய சிவமாம் தன்மையை எனக்கு நல்கி அருளிய பதிப்பொருளுமாகிய சிவபெருமானை நமக்கு ஒப்பற்ற உறவினன் என்று அடைந்து அவனை உள்ளபடி நினைந்து மனம் எல்லாம் அன்பு கனிந்து உருகிப் போற்றி மகிழ்வீர்களாக. எ.று.
உலகியலில் கிடந்து வாழ்வதால் அதனை, “சார் உலக வாதனை” என்று கூறுகின்றார். சத்தியமாய் அமர்தல் - நிலையாய் இருத்தல். உயர்ந்த திருவருள் ஞானத்தைத் தந்தருளுவதால் சிவனை, “உத்தம சற்குரு” என்று உரைக்கின்றார். உம்பர்களாலும் உலகினராலும் மேலே கண்டறிய இயலாமை பற்றி, “எவராலும் கண்டு கொளற்கு அரிதாம் வான்பொருள்” என்று நேருற மொழிகின்றார். நித்திய வான்பொருள் - என்றும் உள்ள பரம்பொருள். ஏர் - அழகு. இயற்கை உண்மை இயல்பாகவே இருந்து விளங்குகின்ற உள்பொருளாகிய சிவமாம் தன்மையை, “எல்லாம் செய் வல்லபம்” என்று உரைக்கின்றார். எல்லா உயிர்கட்கும் தாயும் தந்தையுமாகிய ஒப்பற்ற உறவினன் என்று நினைந்து போற்றி மகிழவேண்டும் என்பதற்காக “ஓர் உறவு என்று அடைந்து போற்றி மகிழ்ந்திடுமின்” என்று புகல்கின்றார். இதனால், உத்தம சற்குருவும், நித்திய வான்பொருளும், இயற்கை உண்மையும், பதிப்பொருளும் ஆகிய சிவ பரம்பொருளை ஓர் உறவென்று அடைந்து உள்ளம் நினைந்து உருகிப் போற்றி மகிழ்தல் வேண்டும் என்பதாம். (28)
|