5605. இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற
தருணம்இதே என்று வாய்மை
அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என்
வார்த்தைகள்என் றறைகின் றாரால்
மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ
எல்லாஞ்செய் வல்லோய் உன்றன்
சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர் இம்
மனிதர்மதித் திறமை என்னே.
உரை: எல்லாம் செயல் வல்ல பெருமானே! உலகில் இறந்தவர்கள் பலரும் மீள உயிர் பெற்றெழுகின்ற சமயம் இதுவே என்று வாய்மையுடன் உரைக்கப்படுகின்ற வார்த்தைகளை நானே உரைக்கின்ற வார்த்தைகள் என்று உலகவர் பலரும் உரைக்கின்றார்; மறதியால் சிறுமையுடைய யான் உரைக்கும் ஆற்றல் உடையவனாவனோ; அதனை உணராமல் உரைப்பவை யாவையும் உன்னுடைய சிறந்த திருவார்த்தைகள் என்று தெளிகின்றார்கள் இல்லை; இவர்களுடைய மதி நுட்பத்தை என்னென்று கூறுவது. எ.று
இறந்தவர்கள் - உயிர் நீங்கிச் செத்தவர்கள். செத்தவர்கள் மீள எழுவர் என்று உரைக்கின்ற வார்த்தைகளை, “வாய்மை அறம் தழைய உரைக்கின்ற வார்த்தைகள்” என்று செப்புகின்றார். உள்ளத்தில் நினைப்பவற்றை வாயால் உரைப்பதற்குள் மறந்தொழியும் சிறுமைத் தன்மையை உடையவன் என்பாராய், “மறந்த சிறியேன்” என உரைக்கின்றார். மறதியால் மாசு படாத அறவுரைகள் என்பது விளங்க, “சிறந்த திருவார்த்தை” என்று தெரிவிக்கின்றார். இறைவனுடைய சிறந்த திருவார்த்தைகளுக்கும் சிறுமையுடைய என்னுடைய புல்லிய வார்த்தைகளுக்கும் வேற்றுமை காணமல் பேசுகின்றார்களே என்றும், இம் மக்களின் அறிவை என்னென்பேன் என்றும் வடலூர் வள்ளல் வியக்கின்றார். (2)
|