5608. பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்
திடுகின்றீர் பேய ரேநீர்
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
மதித்தீரோ இரவில் தூங்கி
மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால்
நும்மனத்தை வயிரம் ஆன
சிறந்தவரை எனப்புகழச்செய்துகொண்டீர்
ஏன்பிறந்து திரிகின் றீரே.
உரை: உலகிற் பிறக்கும் மக்களை நீராட்டிப் பாலூட்டி உடல் வளர வளர்க்கின்ற நீங்கள் இறந்தவர்களை நெருப்பிலிட்டுச் சுடுகின்றீர்கள்; இது செய்வதற்கு உங்கள் மனம் எவ்வாறு சம்மதிக்கின்றீர்களோ தெரியவில்லை; இராப் பொழுதில் நன்றாய்த் தூங்கிக் காலையில் எழுந்திருக்க மறந்தவர்களை இறந்தார் எனக் கருதித் தீயில் இட்டுச் சுட வல்லவர்களாயின் உங்கள் மனத்தை வைரத்தினும் வலி சிறந்த வைரமாலை என்று பலரும் புகழச் செய்து கொண்டவர்களாவீர்கள்; நீங்கள் ஏன்தான் உலகில் பிறந்து திருகின்றீர்களோ? தெரியவில்லை.
பெருக வளர்த்தலாவது பாலும் பிற நல்ல உணவுப் பொருளும் தந்து உடல் பெருக வளர்த்தல். பேயர் - பேயின் தன்மையையுடைய பொல்லாத மக்கள். இரவில் தூங்கி மறந்தவரும் இறந்தவர் போன்றவராதலால் அவர்களைச் சுட்டெரிக்க மாட்டாதவராகின்றீர்கள்; ஆனால் அவர்களையும் இரக்கமின்றிச் சுட்டெரிக்க வல்லவர்களாயின் உங்கள் மனத்தை வைரக் கல்லான மனம் என்று புகழலாம் என்பாராய், “நும் மனத்தை வைரமான சிறந்த வரை எனப் புகழலாம்” என்று கூறுகின்றார். வரை - மலை. வைரமான வரை - வைரக் கற்களால் ஆன மலை. இறந்தவரைச் சுடுவது இரவில் தூங்கி மறந்த நன்மக்களைச் சுடுவதை ஒக்கும் என்பது கருத்து. ஒக்குமாதலால் இறந்தவரைச் சுட்டெரிப்பது கூடாது என்பது கருத்து. (5)
|