5615. ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம்
நன்றே ஒருமையுற்று நண்ணிய - மன்றே
நடம்புரியும் பாத நளினமலர்க் குள்ளம்
இடம்புரிக வாழ்க இசைந்து.
உரை: பரம்பொருளாகிய சிவம் ஒன்றே பல அல்ல என்று தெளிய உணர்ந்து உலகத்தில் உள்ளவர்கள் யாவரும் மிக்க மனவொருமையுடன் சித்திபுரத்தை அடைந்து அங்குள்ள அம்பலத்தில் இருந்து நடம் புரிந்தருளும் இறைவனுடைய பாத தாமரைக்கு மனமிசைந்து தத்தம் மனத்தை இடமாகச் செய்து வாழ்வார்களாக. எ.று.
தில்லையிலும் மதுரை முதலிய இடங்களிலும் அம்பலங்கள் இருப்பதால் ஆங்காங்கு எழுந்தருளிக் கூத்தாடும் சிவபெருமான் ஒருவரோ பலரோ என அயராமை பொருட்டு, “ஒன்றே சிவம்” என்று உணர்ந்து உரைக்கின்றார். மனவொருமை - மனத்திண்மை. பாத நளின மலர் - திருவடியாகிய தாமரை மலர். உள்ளத் தாமரையும் இறைவன் கூத்தாடும் அம்பலமாம் என்பதற்கு, “பாத நளின மலர்க்கு உள்ளம் இடம் புரிக வாழ்க” என்று இசைக்கின்றார். (2)
|