பக்கம் எண் :

5619.

          புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக
          நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில்
          செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்
          ஒத்தாராய் வாழ்க உவந்து.

உரை:

     புல்லிய தீயவருடைய தீயொழுக்கம் பலவும் கடலுட் புகுந்து மறைந்தொழிக; நல்லவர்களுடைய நல்லொழுக்கமே என்றும் நலமிகுந்து ஓங்குக; இல்வாழ்வில் இருந்து இறந்தவர்கள் எல்லாரும் உயிர் பெற்றெழுந்து எல்லாரோடும் மனம் இசைந்து மகிழ்வுடன் வாழ்வார்களாக. எ.று.

     தீயொழுக்கத்தை மேற்கொள்பவர் புல்லியராதலின் அவரது ஒழுக்கத்தை, “புல்லொழுக்கம்” என்று புகலுகின்றார். முற்றவும் கெடுக என்பாராய், “புணரியிடைப் போய் ஒழிக” என்று புகன்று மொழிகின்றார். புணரி - கடல். நல்லொழுக்கம் நலம் பயப்பதாதலால், “நல்லொழுக்கம் ஒன்றே நலம் பெறுக” என்று நவில்கின்றார். “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” என்பது திருக்குறள். இல்லொழுக்கு - இல்லின்கண் இருந்து செய்யும் நல்லறம். மனம் ஒத்தாராய் வாழ்வதாவது மனநினைவில் எல்லாரோடும் ஒப்ப நினைந்து ஒழுகுதல்.

     (6)