5623. ஆடஎடுத் தான்என் றறைக்கின்றீர் என்தலைமேல்
சூடஎடுத் தான்என்று சொல்கின்றேன் - நாடறிய
இவ்வழக்கை யார்பால் இசைத்தறுத்துக் கொள்கிற்பரம்
கவ்வைஅற்ற அம்பலத்தான் கால்.
உரை: குற்றமில்லாத அம்பலவாணனாகிய சிவபெருமான் அம்பலத்தில் ஆடுவதற்காக எடுத்தான் என்று உலகவர்களாகிய நீங்கள் உரைக்கின்றீர்கள்; ஆனால் அப்பெருமான் தன் திருவடியை என்னுடைய தலைமேல் வைத்து அணிவதற்காகத் தூக்கினான் என்று சொல்லுகின்றேன்; நம் இருவர்க்கும் உள்ள இவ்வழக்கை நாடு அறியும்படியாக யாரிடத்தில் சொல்லித் தீர்த்துக் கொள்ளமுடியும். எ.று.
கவ்வை - குற்றம். குற்றத்தை எடுத்துரைக்கும் ஆரவாரத்தையும் கவ்வை என்பது வழக்கம். அறைதல் - சொல்லுதல். இரு திறத்தார் கூற்றிலும் உண்மை விளங்குதலால் இது வழக்குமன்று இதனைத் தீர்த்துக் கொள்வதற்கு வழியுமன்று என்பதாம். (10)
|