பக்கம் எண் :

5624.

          நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
          சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின்
          பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
          யார்உளர்நீ சற்றே அறை.

உரை:

     தேவதேவனே! ஒரு வருத்தமும் இல்லாமல் அருளற நோன்பு என் போல் செய்தவர்களும் என்னைப் போல் எக்காலத்தும் சாவாத வரம் பெற்றவர்களும் நின்னுடைய பெரிய திருவருளை என்னைப் போல் அடைந்தவர்களும் எவ்வுலகத்தில் யாவர் இருக்கின்றார்கள்; சிறிது எண்ணி எனக்கு உரைப்பாயாக. எ.று.

     நோன்பிருத்தலை, நோன்பு நோற்றல் என்பது வழக்கமாதலால் “எனைப் போல் நோன்பு நோற்றவர்” என நுவல்கின்றார். நோதல் - வருந்துதல். எல்லாம் தெரிந்த பெருமானாதலின் நீயாகவே சிந்தித்து உரைப்பாயாக என்பாராய், “நீ சற்றே அறை” என்று சொல்லுகின்றார்.

     (12)