5627. செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ
அம்பதுமத் திருவிளங்கும் அகலத்தான் பிரமன்
அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும்
எம்பரம்என் றெம்பெருமான் புறவண்ணம் எதுவோ
என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
தம்பரம்என் றென்னை அன்று மணம்புரிந்தார் கனக
சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி.
உரை: தோழி, சிவந்து பவளத்தாலாகிய அழகிய மலையையும் மாணிக்க மணியாலாகிய விளக்கையும் செழுமையான சோதியினுடைய ஒப்பற்ற பிழம்பையும் செம்மை நிறத்தின் வண்ணத்தையும் உடைய சிவபெருமானை அழகிய தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் இருந்து ஒளிரும் அகன்ற மார்பையுடைய திருமாலும் பிரமனும் அரனும் முதலாகிய தேவர்கள் ஐவரும் அவர்களுக்கு அப்பாலாகிய தேவர்களும் எங்கட்குப் பரமாகிய சிவபெருமானுடைய புறத்தோற்றம் யாதோ என உரைப்பாராயின், அவருடைய அகவண்ணத்தை எடுத்துரைக்க வல்லவர் யாவர்; தமக்குச் சிறந்தது என்று அடியவளாகிய என்னை அக்காலத்தே திருவருள் ஞான மணம் புரிந்து கொண்டார்; ஆயினும் பொற்சபைக்குத் தலைவராகிய அவரது பெருமையை நான் எவ்வாறு எடுத்து மொழிவேன். எ.று.
சிவபெருமானுடைய திருவுருவுக்குப் பவள மலையையும் மாணிக்க மணியையும் உவமம் கூறுவது சான்றோர் மரபாதலால், “செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ” என்று தலைவி சிவனுடைய புறத்தோற்றத்தைச் சிறப்பிக்கின்றார். செம்மைப் பண்பின் திரட்சியோ என்பாளாய், “செவ்வண்ணத் திரளோ” என்றும், ஒளி மயமாய் விளங்குதலால் “செழும் சோதித் தனிப் பிழம்போ” என்றும் தெரிவிக்கின்றார். பதுமத் திரு. செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள். அகலம் - அகன்ற மார்பு. ஐவர்கள் - சிவன், திருமால், உருத்திரன், சதாசிவன், மகேசன் ஆகிய தேவர்கள் ஐவராவர். அப்பால் நின்றோர், இந்த ஐவர்களுக்கும் வேறாய் நின்ற தேவர் உலகத்துத் தேவர்கள். புற வண்ணம் - புறத் தோற்றம்; உருவத் திருமேனியுமாம். அதற்கு உள்ளீடாகிய சிவ பரம்பொருளை அக வண்ணம் என்கின்றார். தம்பரம் - தமக்குச் சிறப்பு. அருள் ஞானம் பெறுவதைத் திருமணம் என்று குறிப்பது சான்றோர் மரபாதலால், “மணம் புரிந்தார்” என்று தலைவி சொல்லுகின்றார். கனகசபை நாதர் - பொற்சபையில் எழுந்தருளும் தலைவர். (3)
|