5628. தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
சிறந்தமுனித் தலைவர்களோ செம்பெருமாள்கண் டோரோ
மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ
முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்துசொல்ல
அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்
அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.
உரை: தோழி, தேவர்களும், சித்தர்களும், சீவன் முத்தர்களும், சிறந்த முனிபுங்கவரும், செம்பொருளாகிய சிவத்தைக்கண்டு மெய்ஞ்ஞானிகளும், மூவர்களும், அறுவகைச் சத்திகளும், இவர்கட்கு மேல் முதல்வியாகிய சிவசத்தியும் தாம் கருதிக் காதலிக்கும் பெரிய கணவராகிய சிவத்தின் தனிநலங்களை யாவரும் அறியவில்லை என்று பெரியோர்கள் சொல்வார்கள்; ஆனால் மானுட மகளாகிய யான் உணர்ந்துரைக்க முடியுமா? சிறிதளவும் முடியாது அன்றோ; மிக்க அன்போடு மெய்யன்பர்கள் சூழ்ந்த நின்று துதிக்கப் பொற்சபையில் நடித்தருளும் என்னுடைய நாயகராகிய அவர் தம்முடைய பெருமையை எவ்வகையாலும் அவர் தாமே உணர்ந்துள்ளார் என அறிக. எ.று.
செம்பொருள் - மெய்ப்பொருள். இச்சாசத்தி, கிரியா சத்தி, ஞான சத்தி, பார்வதி, திருமகள், சரசுவதி ஆகிய அறுவரும் அறுவகைச் சத்திகளாவர். பரசிவத்தோடு ஒன்றியிருக்கும் பராசத்தியாகிய ஆதி சத்தியை “முதற் சத்தி” என்று மொழிகின்றார். முன்னுதல் - நினைந்து காதலித்தல். ஆவல் - மிகுந்த அன்பு. எவ்விதத்தும் - எல்லா வகையிலும். இதனால், தேவதேவர்களாலும் சத்திகளாலும் சிவன் பெருமையை உணர முடியாது எனினும் அப்பெருமான் தனது பெருமையை நன்கு அறிந்துள்ளான் என்பது கருத்தாம். (4)
|