5632. நாதவரை சென்றுமறை ஓர் அனந்தம் கோடி
நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத
போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப்
புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல்
பாதவரை வெண்ணீறு படிந்திலங்கச் சோதிப்
படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும்
போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால்
புகலவச மாமோநீ புகலாய்என் தோழி.
உரை: தோழி! எண்ணிறந்தனவாகிய வேதங்கள் நாத தத்துவம் வரை சென்று சிவத்தை அறிய முயன்று மாட்டாமல் சோர்ந்தன; சிவாகமங்களும் பரநாத தத்துவம் வரை முயன்று சென்று பல வகையில் ஆராய்ந்து சிவத்தின் நிலைமை காணாது ஓய்ந்து ஒழிந்தன என்று தத்துவ ஞானிகள் சொல்கின்றார்கள் என்றால் உச்சி முதல் திருவடி வரை வெண்மையான திருநீறு அணிந்து விளங்கும் அருட்சோதி உருவமாகிய சிவமூர்த்தம் கொண்டு திருச்சிற்றம்பலத்தில் பரத நடனம் புரிகின்ற போது அவருடைய திருவுருவத்தைக் கண்ணாற் கண்டு இன்புறுவதே அன்றி அவருடைய பெருமையை என்னால் அறிந்துரைப்பது என்பது என் வசமாகாது காண்; இதனை நீயே உணர்வாயாக. எ.று.
மாயா மண்டலத்துக்குள்ளே அதன் சுத்த தத்துவ மத்தகத்தில் விளங்குவது நாத எல்லை; அதுவரையில் தான் வைதீக ஞானிகளின் நல்லறிவு சென்றிருக்கிறது என்பதைத் தெரிவித்தற்கு, “மறை அனந்தம் கோடி நாத வரை சென்று நாடி இளைத்து இருந்தன” என்றும், சிவாகம ஞானிகள் அதற்கு மேலே உள்ள பரநாத தத்துவ எல்லையைக் கண்டு மேல் ஒன்றும் அறியாமல் ஓய்ந்து விட்டன என்பாராய், “ஆகமங்கள் பரநாத போத வரை போந்து புணர்ப்பறியாது இருந்தன” என்றும் அறிந்தோர் உரைக்கின்றனர் என்று தலைவி கூறுகின்றாள். பரநாத தத்துவம் ஞான மயமாதலின் அதனை, “பரநாத போதவரை” என்று பகர்கின்றாள். பலமுகம் கொண்டு தேடுதலாவது பலவகையால் ஆராய்தல். புணர்ப்பு - சிவதத்துவத்தில் தோய்ந்திருக்கும் திறம். கூத்தப் பெருமானுடைய திருவுருவில் அருளொளி விளங்குவது பற்றி, “சோதிப் படிவம் எடுத்து” என்று பகர்கின்றாள். பரத நடம் - பரதநூல் கூறும் ஞான நடம். நடனத்தைப் புரியும் போது பெருமானுடைய திருவடிக் காட்சிக்கு எட்டுகின்றனவே யன்றிச் சொல்லளவுக்கு எட்டுவதில்லை என்பது புலப்பட, “அவர் பெருமை என்னால் புகல வசமாமோ” என்றும், என்னுடைய அறிவெல்லையை நீ அறிந்திருக்கின்றாயாதலால் நீயே சொல்லுக என்பாளாய், “நீ புகலாய் என் தோழி” என்றும் உரைக்கின்றாள். இதனால், சிவத்தை வேதங்கள் நாத தத்துவங்கள் வரை தேடினமையும் சிவாகமங்கள் பரநாத தத்துவம் வரை தேடிப் பார்த்தமையும் தெரிவிக்கப்படுகின்றன. (8)
|