5634. ஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும்
இணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும்
வாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார்
மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே
காய்ப்பந்த மரம்என்று கண்டுசொல்வ தன்றிக்
காய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத்
தாய்ப்பந்த உணர்வுடையேன் யானோசிற் சபையில்
தனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி.
உரை: தோழி! பகல் ஒளியில் பொருந்தி இருக்கின்ற அந்தி மாலைப் போதின் நிறத்தை உடையவர் என்றும், படிகத்தின் நிறத்தை உடையவர் என்றும், ஒப்பில்லாத ஒளி உருவினர் என்றும், தன்னியல்பில் ஒளி இல்லாத அருவ உருவினர் என்றும் வாய்ப்பந்தல் இடுவதன்றி உண்மையை உள்ளவாறு சொல்ல வல்லவர் மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் வேறு உலகங்களிலும் இல்லை காண்க; காய்க்கும் தன்மையுடைய மரத்தைக் கண்ணால் கண்டு சொல்வதன்றி அது காய்க்கும் திறமும் பூக்கும் திறமும் இருந்து கண்டு உரைப்பதன்றிக் கட்டுப்பட்ட உணர்வையுடைய யான் ஞானசபையின்கண் எழுந்தருளும் ஒப்பற்ற முதல்வராகிய சிவபெருமானுடைய அழகிய வடிவு இயல்பை உரைக்க வல்லேன் அல்லேன் காண். எ.று.
பகல் ஒளியில் மறைந்திருந்து மாலை நேரத்தில் வெளிப்படும் இருள் மாலைக் காலம் பற்றி, “ஏய்ப்பு அந்தி வண்ணர்” என்று எடுத்துரைக்கின்றார். இணை - ஒப்பு. அருவ நிலையில் ஒளி வழங்குதல் இல்லாமையால் “இருள் அருவர்” என்று இசைக்கின்றாள். வாய்ப்பந்தல் இடுதல் - பொய்ம்மொழி கொண்டு புனைந்துரைத்தல். காய்களைக் கண்டு இந்த மரம் காய்க்கும் மரம் என்று அறிந்துரைக்கப்படுவது பற்றி, “காய்ப்பந்த மரம்” எனத் தெரிவிக்கின்றாள். இதனால், பொருளை முற்று உணர்ந்து மொழியும் திறம் தனக்கு இல்லாமை விளங்க, “காய்த்த வண்ணம் பூத்த வண்ணம் கண்டு கொள மாட்டாப் பந்த உணர்வுடையேன்” என்று தன் அறிவியல்பை பகர்கின்றாள். பந்த உணர்வு - கட்டுப்பட்ட அறிவு. கட்டுப்பட்டதாயினும் பரந்த இயல்புடையது என்று தெரிவிப்பவளாய், “தாய்ப்பந்த உணர்வுடையேன்” என்று உரைக்கின்றாள். இதனால், ஓர் எல்லைக்குள் அடங்கிய அறிவுடைய யான் எவ்வகை எல்லைக்குள்ளும் அடங்காத சிவத்தின் பெருமையை எடுத்துரைக்க முடியாது என்பாளாய், “யானோ சிற்சபையில் தனிமுதல்வர் திருவண்ணம் சாற்ற வல்லேன்” என்று தெரிவித்தவாறாம். (10)
|