பக்கம் எண் :

5638.

     காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
          காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
     வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
          விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
     தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
          துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
     மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
          வடிவுரைக்க வல்லவர்ஆர் வழுத்தாய்என் தோழி.

உரை:

     தோழி! காற்றின் வடிவமோ? நெருப்பின் வடிவமோ? கடவுள் வடிவம் என்பர்; அவர்களைக் காற்றின் வடிவத்தையும் நெருப்பின் வடிவத்தையும் கண்டு இன்னது என உரைப்பீராக என்று கேட்டால் இரண்டுக்கும் வேறான உருவத்தைக் கூறுகின்றார்கள்; அவர் கூறுவதை வேறோன்று சொல்லி மறுப்போமாயின் கண்களைப் பரக்க விழித்து எம் போன்ற அவர்கள் மிகவும் மயங்குகின்றார்கள்; அங்ஙனமிருக்க தோன்றுகின்ற அத் தத்துவங்களும் தோன்றாத வேறு பல தத்துவங்களும் அற்பப் பொருட்களாகக் கடந்து அவற்றிற்கு அதீதமாய்ச் சுகவடிவாய் வாக்கு மனங்களின் உணர்வுக்கு எட்டாத இடத்தில் இருந்து ஆடல் புரிகின்ற சிவபெருமானுடைய வடிவத்தை எடுத்தோத வல்லவர் யாவர் உளர்? நீயே சொல்லுக. எ.று.

     காற்று முதலிய பூதங்களின் வடிவு பரம்பொருள் வடிவு எனில் அப்பூதங்களின் உண்மை உரு யாதென வினவின் கடவுளின் உரு நிலையை உரைக்கின்ற என் போன்ற மக்கள் தெரியாமல் கண்களைப் பரக்க விழித்து மருளுகின்றார்கள்; இன்னதெனப் புலனாகும் காற்று முதலிய அத்தத்துவங்களையும் புலனாகாத நுண்ணிய பல தத்துவங்கையும் கடந்து சுகசொரூபமாய் வாக்கு மனங்களுக்கு எட்டாத நுண்ணுணர்வுக்கும் அகப்படாத பரம்பொருளாகிய நடராசப் பெருமானுடைய ஞான வடிவின் இயல்பை யாரே உரைக்க வல்லார் என்பது கருத்து.

     (14)