5639. நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெரு வெளிக்கே
ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
உண்மைசொல வல்லவர்ஆர் உரையாய்என் தோழி.
உரை: தோழி! பெரியோர்களால் சொல்லப்படுகின்ற விந்து தத்துவம் அதற்கு மேலுள்ள நாத தத்துவம் அதன் மேலுள்ள பரநாத தத்துவம் ஆகியவை வரை சென்று கண்டோம்; அவற்றிற்கு மேலே உள்ள தத்துவங்களில் செல்ல மாட்டாமல் அவை விளங்குகின்ற பெருவெளிக்குச் செல்லத் திருவருள் துணை கொண்டு முயன்றனம்; முயன்றும் எம்மால் இயலவில்லை அம்மம்ம என்று சிவாகமங்கள் ஓதுகின்ற சிதாகாசப் பெருவெளியில் திருநடனம் புரிகின்ற சிவபெருமானுடைய, உண்மை வடிவை யாரால் சொல்ல முடியும் என்று நீயே சொல்லுக. எ.று.
விந்து நாதம் எனப்படும் சுத்த தத்துவத்தின் மேல் நிலையில் உள்ள தத்துவங்களைப் பரநாதம் பரவிந்து என நுணுகிக் கண்டு அங்கே சிவத்தின் உண்மை இயல்பைக் காணலாம் எனச் சிவாகமங்கள் முயன்றமை இதனால் தெரிகிறது. ஆகம ஞானிகளால் உரைக்கப்படுவது பற்றி, “நவின்ற பரவிந்து” என்று கூறுகின்றாள். மலவுணர்வால் காணப்படாமை பற்றி, பரநாத தத்துவத்தை, “ஓதமிலாப் பரநாதம்” என்று இயம்புகின்றார். பரநாத எல்லைக்கு மேல் அருள் வெளியே நிலவுவதால் அதனை, “இலங்கு பெருவெளி” என்றும், அதனைத் திருவருள் துணை கொண்டல்லது அடைய முடியாமை பற்றி, “பெருவெளிக்கே ஆதரவில் சென்றனம்” என்றும் அறிவிக்கின்றார். ஆதரவு - திருவருள். இதனால், சிவஞானப் பேற்றுக்கு விந்து, பரவிந்து, நாதம், பரநாதம், அருள் வெளி ஆகியவை ஆகமங்களால் ஆராயப்படுகின்றன என்பது காணலாம். (15)
|