பக்கம் எண் :

5645.

     நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர்
          நாரணர்கள் மற்றவரின் நாடின்மிகப் பெரியர்
     வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர்
          மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியள்
     மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம்
          மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியன் அவளின்
     ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய்
          ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி.

உரை:

     தோழி! பிரமர்களாகிய தேவதேவர்கள் ஒவ்வொருவரும் மிகப் பெரியவராவர்; அத்தேவர்களுள் நாரணர்கள் பிரமர்களின் மிகப் பெரியவராவர்; அவர்களைவிட மிகப் பெரியவர்கள் ஆராயின் அவர்கள் வானகத்தே இருக்கின்ற உருத்திரர்கள் என்பர்; அவர்களினும் பெரியவர்கள் மயேச்சுரர் சதாசிவர் என்போர் ஒருவருக்கொருவர் மேம்பட்டு விளங்குகின்றனர்; அவர்களினும் மேன்மையுற்றிருப்பது ஒளி பொருந்திய விந்துதத்துவம்; அதனினும் மிகப் பெரியது நாத தத்துவம்; அத் தத்துவத்திலும் பெருமை மிக்கவள் பரை என்னும் சிவசத்தியாகும்; அவளினும் அவளது சத்தி தத்துவத்திற்கு மேலதாய் விளங்குவது பரம்பரமாகிய சிவ பரம்பொருள்; அதனினும் பெரிதாய் விளங்குபவர் கூத்தாடுகின்ற சேவடியைவிடச் சிவத்தினும் பெரிதாய் உளது வேறொன்றும் இல்லை என அறிவாயாக. எ.று.

     நான்முகர்கள் - பிரமர்கள். அவர்கள் எண்ணிறந்தவராதலின், “நான்முகர்கள்” என்று பன்மையாற் கூறுகின்றாள். நாரணர்களும் அப்பெற்றியராதலால் அவர்களும் பன்மை வாய்பட்டால் கூறப்படுகின்றார்கள். “நூறு கோடி பிரமர்கள் நுங்கினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே” எனத் திருநாவுக்கரசர் கூறுவது காண்க. வான்முகம் - வானுலகம். உருத்திரர், மயேச்சுரர், சதாசிவர் என்பவர்கள் முறையே சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை ஆகிய சுத்த தத்துவங்களில் விளங்குபவராவர்; அவர்களுடைய தத்துவங்களினும் மேன்மையும் பெருமையும் உடைமை பற்றி இவர்களுடைய தத்துவ உலகிற்கு மேலாய் விந்து தத்துவத்தை எடுத்துரைக்கின்றார்; அது தன்னியல்பில்ஒளி உடையதாகலின் அதனை, “மீன் முகத்த விந்து” என்று கூறுகின்றாள். மின் என்பது எதுகை நோக்கி மீன் என வந்தது, விந்து தத்துவத்தினும் பெரியது நாத தத்துவம் என்றும் அதனிற் பெரியது சத்தி தத்துவம் என்றும் அதனிற் பெரியது சிவதத்துவம் என்றும் தத்துவ நூலார் கூறுவர். சத்தியைப் பெண்ணாகவும் சிவத்தை ஆணாகவும் உருவகம் செய்துரைப்பது மரபு என அறிக. ஆன்முகம் - அவ்விடம்; அதாவது சத்தி தத்துவத்தின் மேலாகிய அவ்விடம். அதனைப் பரம்பரம் என்பதும் வழக்கு. அப்பரம்பரமாகிய ஆகாசத்தில் சிவனுடைய திருநடனம் நிகழ்தலால் அதனை, “அதனிற் பெரிதாய் ஆடுகின்ற சேவடி” என்று புகல்கின்றாள். இதனால், சுத்த தத்துவத்தில் தேவதேவர்களின் மேலாய்ச் சிவத்தின் திருவடி நிலை பேசப்படுவது காண்க.

     (21)