5671. அதுபா வகமுகத் தானந்த நாட்டில்
அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
விதுபா வகமுகத் தோழியும் நானும்
மெய்ப்பா வனைசெய்யும் வேளையில் வந்து
பொதுபா வனைசெய்யப் போகாதோ பெண்ணே
பொய்ப்பா வனைசெய்து கைப்பானேன் ஐயோ
இதுபாவம் என்கின்றார் என்னடி அம்மா
என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
உரை: அம்மா! அந்தத் தியான முகத்தால் காணப்படுகின்ற ஆனந்தச் சூழலில் அம்பலம் வகுத்துக் கொண்டு அதன்கண் நின்று ஆடுகின்ற சிவபெருமானாகிய அழகர் முழுச் சந்திரன் போலும் முகத்தை யுடைய தோழியும் நானும் ஒருங்கே இருந்து சிவனை உண்மையாக எண்ணி இருக்கும் பொழுதில் எங்களிடம் வந்து என்னைப் பார்த்து, “பொதுவாகச் சிவயோகப் பாவனையைச் செய்யாமல் பெண்ணே நீ பொய்யான பல பாவனைகளைச் செய்து வருந்துவானேன்; ஐயோ, இது பாவமாயிற்றே” என்று சொல்லுகின்றார்; சொல்லியதும் என்னுடைய கையைப் பிடிக்கின்றார்; அவர் கருத்து என்னவோ? சொல்வாயாக. எ.று.
பாவகம் - பாவனை; அதாவது கற்பனையாக எண்ணுதல். சிவானந்தம் பொருந்திய நாட்டை மனத்தால் கற்பித்துக் கொள்ளுதல். முழுச் சந்திரன் போன்றது மெய்ப்பாவனை. உண்மையாக மனத்தால் சிவ பரம்பொருளை நினைந்து பரவுதல் பொதுபாவனை. சிவனைப் பொது நிலையில் பரம்பொருளாக வைத்துப் பாவனை செய்தல். நிலையில்லாத பொருள்களை நிலை உடையனவாக நினைந்து பின்னர் அப் பாவனைப் பொருள் நிலையின்றிக் கெடுவது பற்றி மனம் வருந்துவானேன் என்பாளாய், “பொய்ப்பாவனை செய்து கைப்பானேன்” என்று கூறுகின்றாள். கைத்தல் - வெறுத்து வருந்துதல். பொய்ப்பொருளை மெய்ப்பொருளாகப் பாவித்து வருந்துவது பாவமாதலால், “இது பாவம் என்கின்றார்” என்று தலைவி சொல்லுகின்றாள். முன்பாட்டில் என்னைப் பார் என்கின்றார் என்பதும், இது பாவம் என்கின்றார் என்பதும் கொண்டெடுத்து மொழிதல் எனப்படும். இவ்வாறே மேல்வருவனவற்றையும் கொள்க. பரசிவம் பரதெய்வம் என்பது பொதுபாவனை; சிறு தெய்வங்களைப் பரதெய்வமாகப் பாவிப்பது பொய்ப்பாவனை. (2)
|