5679. ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும்
அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர்
தேறறி வாகிச் சிவானு பவத்தே
சின்மய மாய்நான் திளைக்கின்ற போது
மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே
வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே
ஏறினை என்கின்றார் என்னடி அம்மா
என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
உரை: அம்மா! ஆகிய அந்தங்களாயும் அல்லவாயும் அம்பலத்தின்கண் நின்று ஆடல் புரிகின்ற ஆனந்த சித்தராகிய சிவனைத் தெளிந்துணரும் உணர்வாய்ச் சிவானுபவத்தின்கண் ஞான மயமாய் நான் நின்று மகிழ்கின்ற போழ்து, “மாறில்லாத அருள் ஞான வாழ்வில் வாழ்கின்ற பெண்ணே, இந்தப் பெரிய நிலைக்கு மேல் நிற்கும் வல்லமை அடைந்துவிட்டாய்” என்று சொல்லி என் கையைப் பிடிக்கின்றார்; உவர் கருத்து என்னவோ தெரியவில்லை. எ.று.
ஆறெனும் அந்தங்களாவன: வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், கலாந்தம், யோகாந்தம் என்பன. இவ்வந்தங்களால் பெறலாகும் ஞானத்தை அந்தமாகியும் அல்லவாகியும் இருக்கின்றன என்பார், “அந்தங்களாகியும் அன்றாகும்” என்று கூறுகின்றாள். ஆனந்த சித்தர் - ஆனந்த மயமாகச் சிந்தையில் எழுந்தருளும் சிவபெருமான். தேறறிவு - தெளிவுறும் சிவஞானம். சிவஞானானுபவத்தில் ஞான மயமாய் விளங்குவது பற்றி, “சிவானுபவத்தே சின்மயமாய்த் திளைக்கின்றபோது” என்று செப்புகின்றாள். சிவநெறிக்கு மாறாகாத சிவ நெறியில் வாழ்வது பற்றித் தலைவியை, “மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே” என்று குறிக்கின்றாள். சிவயோக போக நிலையை, “மாநிலை” என்று சிறப்பிக்கின்றாள். ஏறுதல் - உயர்தல். யோகாந்த ஞான நிலையில் இங்கே கூறப்பட்ட உண்மைகள் உணரத்தக்கனவாதலால் இவற்றை மேலும் விளக்க முடியவில்லை. (10)
|