பக்கம் எண் :

5681.

     தனிப்பெரும் பதியே என்பதி ஆகத்
          தவம்எது புரிந்ததோ என்றாள்
     அனித்தநீத் தெனைத்தான் அன்பினால் அணைத்தான்
          அதிசயம் அதிசயம் என்றாள்
     இனித்துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள்
          எனக்கிணை யார்கொலோ என்றாள்
     சனிப்பிறப் பறுத்தேன் என்றுளே களிப்புத்
          ததும்பினாள் நான்பெற்ற தனியே.

உரை:

     நான் பெற்ற தனிச் சிறப்புடைய மகள், ஒப்பற்ற பெருந்தலைவராகிய சிவபெருமானை எனக்குக் கணவராகப் பெறுதற்கு என் பிறப்பு என் தவம் செய்ததோ அறியேன் என்றும், நிலையில்லாத பிறப்பினின்றும் நீக்கி என்னைத் தானே உவந்து அன்போடு தழுவிக் கொண்டான்; இந்த அதிசயத்தை என்னவென்று உரைப்பேன் என்றும், இனி யான் சிறிதளவும் துன்பமடையேன் என்றும், எனக்கு ஒப்பானவர் யாவர் உளர் என்றும், துன்பம் தரும் பிறவித் தொடர்பை அறுத்துவிட்டேன் என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க உரைக்கின்றாள் என நற்றாய் மொழிகின்றாள். எ.று.

     சிவயோகானுபவத்தை வாய்விட்டுரைக்கும் வல்லமை பெற்றிருத்தலால் தன் மகளை, “நான் பெற்ற தனி” என்று நற்றாய் சிறப்பிக்கின்றாள். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனித் தலைவனாதலால் சிவபெருமானை, “தனிப் பெரும் பதி” என்றும், அவனே தனக்குக் கணவனாகக் கொண்டமை விளங்க, “என் பதியாக” என்று தலைவி உரைக்கின்றாள் என்றும், அரிய பெரிய தவமுடையார்க்கன்றிச் சிவயோகம் கைகூடாதென்பது பற்றி, “தவம் எது புரிந்ததோ” என்று தலைவி கூறுகின்றாள் என்றும் நற்றாய் வியந்துரைக்கின்றாள். சிவயோகப் பயனாகத் தான் துன்பமில்லாத இன்ப வாழ்வு பெற்றமை இனிது விளங்க, “இனித் துயர் சிறிதும் அடைந்திடேன்” என்றும், “எனக்கு இணை யார் கொலோ” என்றும், இனித் தனக்குத் துன்பம் தரும் பிறப்பு கிடையாது எனச் சொல்லி மகிழ்கின்றாள் என்பாளாய், “சனிப் பிறப்பு அறுத்தேன் என்றுளே களிப்புத் ததும்பினாள்” என்றும் நற்றாய் மொழிகின்றாள். எ.று.

     அனித்தம் - நிலையில்லாமை, சனிப்பிறப்பு - துன்பம் தரும் பிறவித் தொடர்பு. ததும்புதல் - நிறைதல்.

     (2)