5689. ஏலுநன் மணிமா மன்றருட் சோதி
என்னுளத் தமர்ந்தனன் என்றாள்
பாலும்இன் சுவையும் போன்றென தாவி
பற்றினன் கலந்தனன் என்றாள்
சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கே
சத்தியை அளித்தனன் என்றாள்
மேலும்எக் காலும் அழிவிலேன் என்றாள்
மிகுகளிப் புற்றனள் வியந்தே.
உரை: அழகு பொருந்திய நல்ல மணிகளால் இயன்ற அம்பலத்தின்கண் எழுந்தருளும் அருட்பெருஞ்சோதியாகிய சிவபெருமான் என் மனத்தின்கண் எழுந்தருளிப் பாலும் இனிய சுவைப் பொருட்களும் கலந்தது போல என் உயிரைத் தான் பற்றிக்கொண்டு என்னுட் கலந்து கொண்டான் என்றும், அதுவன்றியும் பொருந்திய எல்லா வுலகங்களும் வளர்ந்து சிறக்க அவற்றைக் காத்தருளும் சத்தியையும் எனக்குத் தந்துள்ளான் என்றும், அதனால் நான் எக்காலத்தும் அழிதல் இல்லேன் என்றும் என் மகள் மிக்க மகிழ்ச்சியுடன் தன்னை வியந்து விளம்புகின்றாள் எனச் செவிலிக்கு நற்றாய் கூறுகின்றாள். எ.று.
ஏலுதல், சாலுதல் ஆகிய இரண்டும் பொருந்தும் என்னும் பொருள் தருவன. அருள் ஒளியே தனக்கு உருவாக உடையவனாதலால் சிவனை, “அருட்சோதி” என்றும், அவனைக் கூத்தப் பெருமான் உருவில் வைத்து உலகவர் போற்ற மகிழ்தலால், “மன்றருட் சோதி” என்றும் போற்றுகின்றாள். தன் உயிரிற் கலந்தபோது பெற்ற இன்பத்தை, “பாலும் இன்சுவையும் போன்று எனது ஆவி பற்றினன்” என்று தலைவி கூறுகின்றாள். உலகு புரக்கும் ஒள்ளிய சிவசத்தியைத் தனக்கு சிவன் அருளினான் என்பதை, “சத்தியை அளித்தனன்” என்று தலைவி கூறுகின்றாள். சிவசத்தி தனக்கு எய்தினமையால் தனக்கு எக்காலத்தும் அழிவில்லை என்று தெரிவித்தற்கு, “எக்காலும் அழிவிலேன்” என்று சொல்லி மிகுந்த உவகை கொண்டாள் என்பாளாய், “எக்காலும் அழிவிலேன் என்றாள்” என்றும், “மிகு களிப்புற்றனள்” என்றும் நற்றாய் மகிழ்ந்துரைக்கின்றாள். (10)
|