140. தோழிக்கு உரிமை கிளத்தல்
அஃதாவது, சிவபரம்பொருளுக்கும் ஆன்ம சிற்சத்தியாகிய தனக்கும் உள்ள உரிமையைச் சூழவிருக்கும் தோழிகட்குத் தலைவி எடுத்துரைப்பதாம். கூத்தப் பெருமானுடைய திருவருளைப் பெற்ற தலைவி தன்னுடைய அச்சமின்றி உயர்ந்த அருமை நிலைமையை வியந்து நான் அம்பலத்தின்கண் ஆடி அருளும் கூத்தப் பெருமானுக்கே நிலைத்த குடியாதலால், நான் எவர்க்கும் குடியல்லேன் எனத் தலைவி இறுமாந்து கூறுவதாகும். மேலும், இதன்கண், தலைவியை நோக்கித் தோழியர்கள் வினவுவதும் அவர்கட்குத் தலைவி விடை கூறுவதும் பாட்டுத்தோறும் கண்டு இன்புறுதற்கு உரியனவாம்.
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 5690. நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவே
வியந்துமற்றைத் தேவர்எலாம் வரவும்அவர் நேயம்
விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
வயந்தரும்இந் திரர்பிரமர் நாரணர்கா ரணர்கள்
மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும்
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
உரை: உலகுயிர்கள் அனைத்தும் விரும்பிப் போற்றுகின்ற திருக்கூத்தை ஆடியருளும் நடராசர் உனக்குக் கணவரே என்றாலும் உண்மை நோக்கிய மந்திரங்கள் சில தம்மில் ஒன்று கூடி அவர் தலைமையைப் போற்றி உரைப்பதை வியந்து மற்றைத் தேவர்கள் எல்லாரும் அவர் திருமுன் வந்து ஓதி வணங்கவும் அவர்களுடைய அன்பை மதியாதொழிவது என்னையோ என்று என் தோழியராகிய நீ வினவுகின்றாய்; வன்மை மிக்க இந்திரர்களுக்கும் பிரமர்களுக்கும் நாரணர்களுக்கும் காரண தேவர்களுக்கும் மற்றைய தேவர்கள் எவர்க்கும் நான் சிறுமை பொருந்திய குடியல்லள்; நான் திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளும் நடராசப் பெருமானுடைய திருவடிகளுக்கே அடிப்பணி புரியும் நிலைத்த குடியாவேன்; இதனைத் தெளிய அறிவாயாக. எ.று.
எவ்வுலகத்து எவ்வுயிர்களும் விரும்பிப் போற்றும் தலைவராதலால் கூத்தப் பெருமானை, “நயந்த நடநாயகர்” என்று தோழி உரைக்கின்றாள். நாடிய மந்திரங்கள் - சிவனுடைய திருவருளை விரும்பிப் போற்றும் மந்திரேசுரர்கள். கூடியிருந்து ஓதுவதற்குரியவர் மந்திரேசுரர்களாதலால் அவர்களை, “மந்திரங்கள்” என்று தோழி கூறுகின்றாள். தம்மைப் போலவே மந்திரேசுரர்களும் சிவனைப் போற்றுவது கண்டு வியந்து வருகின்றார்களாதலால், “வியந்து மற்றைத் தேவரெலாம் வரவும்” என்றும், அவரது அன்பைக் கண்டு வியந்து விரும்பாமல் இருப்பது முறையன்று என்பாளாய், “தேவரெலாம் வரவும் அவர் நேயம் விரும்பாது இருப்பது குற்றமன்றோ” என்று தோழி உரைக்கின்றாள். மற்றைத் தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாது இருப்பது என் நீ என்கின்றாய் தோழி எனத் தலைவி உரைக்கின்றாள்; இது தோழி கூற்றைத் தலைவி கொண்டெடுத்து மொழிவதாகும். வயம் - வலிமை. இந்திரர் பிரமர் முதலிய தேவர்களும் அவர்கட்குக் காரணமாகிய தேவர்கள் மிகப் பலராதலால் அவர்களை விதந்து, “இந்திரர் பிரமர் நாரணர் காரணர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள்” எனத் தலைவி அடுக்கி மொழிகின்றாள். குற்றம் குறைகள் இருந்தாலன்றி அச்சமுண்டாகாது; ஆகையால், “எவர்க்கும் பயந்த குடி அல்லடி” எனத் தலைவி எடுத்துரைக்கின்றாள். அடிப்பணி- திருவடிக்குச் செய்யும் குற்றேவல். பதித்த குடி - நிலைத்த குடி. (1)
|