5691. நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர்
வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே
மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும்
மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும்
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
உரை: எத்தகைய உயிர்களாலும் விரும்பப்பட்ட நடராசப் பெருமானே உனக்கு நாயகர் என்பதனால் நங்கையாகிய உன்னைக் கண்டு இன்புற எண்ணி மற்றைய தலைவர்கள் பலரும் வியப்புடன் வருவதைக் கண்டும் அவர்களை உபசரிக்காமல் இவ்விடத்தே பராமுகமாய் நீ இருப்பது என்னையோ என்று தோழியாகிய நீ என்னை வினாவுகின்றாய்; வலி மிக்க நிலம் முதல் நாத தத்துவம் வரையுள்ள நாட்டார்க்கும் அவர்களுக்கு மேல் நின்று செலுத்துகின்ற பெரிய நாட்டுத் தலைவர்களுக்கும் அஞ்சத்தக்க சிறுமை பொருந்திய குடி நான் அல்லேன்; நான் திருச்சிற்றம்பலத்தின்கண் தலைவராய் நடம் புரியும் பெருமானுடைய திருவடிக்குக் குற்றேவல் செய்யும் நிலைத்த குடியாவேன் என அறிக. எ.று.
நயத்தல் - விரும்புதல். நங்கை - சிவனை மணம் புணரும் சிறப்புடையவள். உபசரித்தல் - நன்கு மதித்துப் போற்றுதல். மேல் நோக்கி இருப்பதாவது பார்த்தும் பாராமல் பராமுகமாய் இருப்பது. நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், என்று ஐந்து பூதங்களிலும் கலை, வித்தை, அராகம், காலம், நியதி, புருடன், மாயை ஆகிய தத்துவங்களிலும் சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், விந்து, நாதம் ஆகிய தத்துவங்களிலும் புவனங்களும் புவன பதிகளும் உள்ளனர் என்று தத்துவ நூலோர் கூறுவதால், “பார் முதல் நாத வரை உள நாட்டவர்க்கும் மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும் பயந்த குடி அல்லடி” என்று தலைவி கூறுகின்றாள். (2)
|