பக்கம் எண் :

5694.

     மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு
          மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க
     இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால்
          எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி
     மடங்கும்சம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும்
          வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும்
     அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
          ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே.

உரை:

     தோழி, அறியாமை பொருந்திய மனத்தை உடையவர்கள் அடைதற்குரிய நடராசப் பெருமானே, நினக்கு மணவாளர் என்றாலும் சிறப்பிடம் பெற்ற மூர்த்திகளாகிய தேவர்கள் உன்னிடம் வந்து மகிழ்வுடன் சில வார்த்தைகள் பேச விரும்பினால் அவர்களைப் பார்க்கச் சிறிதும் விருப்பமில்லாமல் இருக்கின்றாய்; இஃது என்னையோ என்று கேட்கின்றாய்; சமயத் தலைவர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் அவர்களுக்குரிய ஞான ஒழுக்கங்களைக் கற்பித்துதவும் பெரிய தலைவர்களுக்கும் அடங்கி நிற்கும் குடிக்குரியவள் அல்லள் நான்; திருச்சிற்றம்பலத்தில் ஆடி அருளுகின்ற சிவனுடைய திருவடித் தொண்டு புரிதற்கே அமைந்த குடிக்குரிய பெண்ணாவேன். எ.று.

     மடம், அறியாமை, ஆணவம் முதலிய மலக்கலப்புடைய கீழ் மக்களை, “மடங் கலந்தார்” என்று தோழி கூறுகின்றாள். மணவாளர் - கணவர். மூர்த்திகள் - தேவ உருவுடைய உயர்ந்தோர். எண்ணமிலாது இருத்தல் - அசட்டை செய்து ஒழுகுதல். உண்மை விளங்குமிடத்துக் கீழ்ப்பட்டு ஒடுங்கும் பொய்ச் சமயத் தலைவர்களையும் மடங்கு சமயத் தலைவர் என்று இகழ்கின்றாள். இவர்களுக்கு வேண்டும் ஞான ஒழுக்கங்களை நல்குபவர்களை, “வயங்கும் இவர்க்கு உபகரிக்கும் மாத்தலைவர்” என்று குறிக்கின்றாள். அம்பலத்தில் நின்றாடும் சிவன் சேவடியை, “ஆடலடி” என்று புகழ்கின்றாள்.

     (5)