பக்கம் எண் :

5702.

     வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி
          மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும்
     தூயபரா பரம்அதுவே என்றாள்அங் கதுதான்
          துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண்
     மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில்
          விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும்
     ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே
          அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே.

உரை:

     வாய் பேசாமல் மௌனமாக இருப்பதல்லது வேறு வழியில்லை என்றால், தோழி, மௌன சத்திகள் நிலவுகின்ற ஏழு வெளிகளுக்கும் மேலனவாய் பரத்தில் ஒடுங்கி நிற்பது தூய பராபரமாம்; அதுதானும் ஏழுவகை வெளிகளில் நடு வெளியில் கலந்து கரைந்து ஒழிவதாம்; பொருந்திய நடுவழி என்னையோ என்றால் அது தற்பரமாகிய பெருவெளியில் கலந்து மறையும்; தற்பரமாகிய பரவெளி யாது எனின், அது எல்லாவற்றிற்கும் மேலதாகிய பெருவெளியில் அடங்கி விடும்; யான் உரைக்கும் இதுதானும் மௌன நிலையை ஒருவாறு அளந்து காணும் நெறியாகும்; அதற்கு மேல் அளந்தறிய வழி ஒன்றும் கிடையாது. எ.று.

     இதன்கண் மௌன சத்திகள் எனப்பட்டவை மாயா சத்தி, கிரியா சத்தி, பராசத்தி, இச்சா சத்தி, ஞானசத்தி, ஆதிசத்தி, சிற்சத்தி என்ற ஏழுமாம். இவை பரம்பொருளிடத்தே ஒன்றி இருப்பனவாதலால் அதன் கண்ணே ஒடுங்குவது புலப்பட, “சத்தி வெளி ஏழும் பரத்த” என்றும், “பரத்தொழியும்” என்றும் கூறுகின்றாள். ஏழும் ஒழிந்த வழி நிற்பது பராபரமாதலால் அதனை, “தூய பராபரம்” என்று சொல்லுகின்றாள். நடுவெளி என்றது, பரத்தும் அபரத்துக்கும் இடைவெளியாகும்; அதுதானும் பராபரத்தில் ஒடுங்கி மறைவதுபற்றி, “அதுதான் மேய நடுவெளி தனிலே கலந்து கரைவது” என்றும், “மேய நடுவெளி என்றால் தற்பரமாம்” என்றும் உரைக்கின்றாள். இதனால், மௌன சத்திகள் ஏழும் பரத்தில் ஒடுங்குவதும் பராபர சத்தி நடுவெளியில் ஒடுங்குவதும், நடுவெளி தற்பர வெளியில் ஒடுங்குவதும், தற்பர வெளி பெருவெளியில் ஒடுங்குவதும் கூறப்பட்டன. மௌன சத்தி ஆராய்ச்சி பரமாகிய ஏழு வெளியும் அவற்றின் மேல் பராபர வெளியும் அதற்கு மேல் நடுவெளியும் அதற்கு மேல் தற்பர வெளியும் அதற்குமேல் பெருவெளியும் கூறியவாறாம், இவற்றின் இயல்புகளை அனுபவமுடைய யோகாந்த ஞானிகள்பால் கேட்டறிதல் வேண்டும்.

     (13)